3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுமார் 9 ஆண்டு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் ஆக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்திருக்கிறார். இதுதவிர நடிகைகள் ஜீவிதா, தன்யா பாலகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, தங்கதுரை ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
லால் சலாம் திரைப்படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. இதனால் அதிகப்படியான திரையரங்குகளில் லால் சலாம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இதனை முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாகவே புரமோட் செய்தனர். இதனால் படத்தின் வசூலும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
லால் சலாம் திரைப்படம் சமூக கருத்துகள் அடங்கிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாகும். இப்படத்தின் விமர்சனம் பல தரப்பு ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ள நிலையில், பலரை ஏமாற்றியுள்ளது. ரஜினியின் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வலிமை இப்படத்தின் திரைக்கதைக்கு இல்லாததே காரணம். மேலும் இந்த படம் ரஜினிகாந்தின் நேரடிப்படம் என இல்லாத நிலையில், இதில், கேமியோ ரோலில் தான் அவர் நடித்துள்ளார் என நினைத்த ரசிகர்கள் ஜெயிலர் படம் முதல் நாளுக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் இந்த படத்துக்கு கொடுக்கவில்லை.
இந்நிலையில், லால் சலாம் படுதோல்வியை சந்தித்த நிலையில் பல கோடிகள் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். சுமார் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.27 கோடி வசூலித்து, ரூ.15 கோடி மட்டுமே வசூல் செய்தது. இப்படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியதாவது, “ லால் சலாம் படத்தில் நாங்கள் பல காட்சிகளை தொலைத்துவிட்டோம் என்பது தான் உண்மை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 21 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. எங்களது பொறுப்பின்மைதான் காரணமாக அத்தனை காட்சிகளையும் தொலைத்துவிட்டோம். அது துரதிர்ஷ்டவசமானது.
இந்த 21 நாட்களும் நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை படமாக்கியிருந்தோம், அது ஒரு பத்து கேமரா செட்-அப். இது ஒரு உண்மையான கிரிக்கெட் போட்டி போல் படமாக்க விரும்பினோம். இருபது கேமராக்களின் காட்சிகளையும் நாங்கள் தவறவிட்டோம். கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. விஷ்ணு, செந்தில், அப்பா உட்பட அனைவருமே தங்கள் கெட்-அப்பை மாற்றிக்கொண்டதால் அந்த காட்சியை மீண்டும் எங்களால் படமாக்க முடியவில்லை.
கடைசியில், மீதி இருந்ததை வைத்து படத்தை மீண்டும் எடிட் செய்தோம். இது சவாலாக இருந்தது. விஷ்ணுவும் அப்பாவும் ஒத்துழைத்து, அதை மீண்டும் செய்யத் தயாராக இருந்தபோதிலும், எங்களால் அதை மீண்டும் படமாக்க முடியவில்லை. பல ஹார்ட்டிஸ்குகள் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்றும், அடுத்த முறை காட்சிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனக்கு ஒரு பாடம். தொலைந்து போன காட்சிகள் கிடைத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறினார்.