நடிகை ராதிகா நடித்து வந்த அணைத்து தொலைக்காட்சி தொடர்களில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது, அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து அவருடைய கனவர் சரத்குமார் கூறுகையில், என் வாழ்க்கை பயணத்தில் எனக்குள் இருக்கும் சக்தியாக, சகதோழியாக, துணைவியாக என் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக நிற்கும் கலையரசி ராதிகா, சமீபத்தில் அவர் நடித்து வந்த சித்தி – 2 தொடரில் இருந்தும், நெடுந்தொடர்களிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டிருந்த சமயம் வெள்ளித்திரை நடிகர்களுக்கு சின்னத்திரையில் எதிர்காலம் உண்டு என சின்னத்திரையில் நுழைந்து தடம்பதித்ததுடன் கலையுலகத்திற்கு பாதை அமைத்து வழிகாட்டியவர் ராதிகா என்பதை பெருமையுடன் அனைத்து இடங்களிலும் சொல்வேன். அப்பேற்பட்ட அவர் 2 தசாப்தங்களுக்கு மேலாக தமிழகத்திலுள்ள அனைத்து இல்லங்களிலும் சித்தியாக, அண்ணாமலையாக, செல்வியாக, அரசியாக, செல்லமேவாக, வாணி ராணியாக, சந்திரகுமாரியாக, சித்தி – 2 வாக வந்திருந்து தமிழ்க் குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்துள்ளார்.
சமீபத்தில் ராதிகா சின்னத்திரையில் இருந்து விலக முடிவு செய்து அறிவித்தது அவரை பின் தொடர்பவர்களுக்கும், அன்றாடம் அவரை காண்பதற்காக தொலைக்காட்சி முன் உட்காரும் அவரது ரசிக பெருமக்களுக்கும் எந்த அளவிற்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், பரந்து விரிந்த உலகத்தில் வாழ்க்கையை சிறிய வட்டத்தில் அடைக்க முடியாது. வித்தியாசமான கதாபாத்திரங்கள், வித்தியாசமான கதையம்சம் பொருந்திய கதைக்களங்கள் கொண்ட சினிமாக்கள், ஓடிடி தளங்கள் என வாய்ப்புகள் பலவழியில் தேடிவருவதாலும், கோவிட் பெருந்தொற்றால் ரடான் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சீர் செய்து சிறப்பாக செயல்படுவதற்கும், தன்னுடைய கலையுலக பயணத்தை மேலும் மெருகேற்றி அவரது நடிப்புத்திறமையை பல பரிமாணங்களில் வெளிப்படுத்துவதற்கும் இந்த முடிவு எடுத்திருக்கிறார் எனும்போது அதை வரவேற்போம்.
மேலும், தன் வாழ்க்கையில் சவால்களை துணிச்சலுடன் சந்திக்ககூடிய என் மனைவி ராதிகா பெண்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுபவர். அவரது நிர்வாக திறமையையும், பெண்கள் அவர்மீது கொண்ட ஈடுபாட்டையும், மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் பொறுப்புடன் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கினேன்.
எடுத்த செயல்களில் 100% சிறப்பாக செயல்படும் ராதிகாவின் “கிழக்கே போகும் ரயில்” தற்போது “தெற்கே” வந்துகொண்டிருக்கிறது. அதாவது தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யவுள்ளார் என்பதை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அளவுகடந்த அன்பு வைத்து எங்களை உருவாக்கிய ரசிகபெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந்த இனிய காதலர் தினத்தில் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.