ஒரு காமெடி நடிகராக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேரும் புகழையும் சம்பாதித்தவர் யோகி பாபு. அதாவது வாயுள்ள பிள்ளைகள் எங்கே போனாலும் பிழைத்து விடும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார் போல் இவருடைய நக்கல் கலந்த நகைச்சுவையால் இவருக்கான இடத்தை நிலையாக தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது இவர் இல்லாமல் எந்த படங்களும் இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. அதற்கு ஏற்றார் போல் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். ஒரு புறம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும், மறுபக்கம் கதையின் நாயகனாகவும் அவதரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கைவசம் 10 படங்கள் வைத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த மாவீரன், ஜெய்லர் படங்களுக்கு பிறகு வெளிவர இருக்கும் படங்களான ஜவான், அயலான், எல்ஜிஎம், கங்குவா, அரண்மனை 4, சதுரங்க வேட்டை 2, அந்தகன், மருத்துவ அதிசயம், பூமர் அங்கிள், விஷாலின் 34 ஆவது படத்திலும் இணைந்துள்ளார். இப்படித் தொடர்ந்து பல படங்களில் யோகிபாபு கமிட்டாகி பிசியாக இருந்து வருவதற்கு காரணம், இவருடைய காமெடிக்காக இல்லை.
தற்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், யோகிபாபுவை விட்டால் வேறு ஆட்கள் இல்லை என்கிற சூழல் தமிழ் சினிமாவில் இருப்பது தான். இதனை தொடர்ந்து இவர் நடிக்க இருக்கும் படங்களிலும் இவருடைய மார்க்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் நடிகர் யோகி பாபு மீது நேற்று போலீசில் புகார் அளித்தார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் ‘ரூபி பிலிம்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் முகமது ஹாசிர். இவர் வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் யோகி பாபு மீது ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜாக் டேனியல் என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கியதாகவும் அதில் யோகி பாபுவை நடிக்க வைக்க ரூ. 65 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமாக ரூ. 20 லட்சம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்றும் படப்பிடிப்பிற்காக அழைத்தாலும் வராமல் ஏமாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பணத்தை பெற்றுக் கொண்ட நடிகர் யோகி பாபு நடிக்க வராமலும், பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த லக்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் யோகி பாபு திடீரென பணக்காரராகி அதன்பின் ஏற்படும் பிரச்சனைகளை சந்திப்பது தான் கதை. யோகி பாபு, வீரா, ரெபாக்கா, ஆர்எஸ்வாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். வீரா இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சீன் ரோல்டன் இசையில், சந்தீப் விஜய் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.