இனி மேல் டிமிக்கி கொடுக்க முடியாது… விஷால் நடிப்புக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு…

0
Follow on Google News

பிரபல படத் தயாரிப்பு நிறுவனம் லைகா, நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது, இந்த வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அந்த வழக்கின் படி, முன்னதாக நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியிருக்கிறார்.

மேலும், வாங்கிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்த முடியாமல் தவித்த விஷாலின் முழுக் கடனையும் ஏற்றுக்கொண்டு லைகா நிறுவனம் அடைத்துள்ளது.அத்துடன் லைகா நிறுவனம் விஷாலுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி, விஷால் அந்தத் தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனம் மீதும் லைகா நிறுவனம் புகார் கொடுத்திருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி விரைவில் 15 கோடியை டெபாசிட் செய்யுமாறும் விஷாலின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்தத் தொகையை செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் மற்றும் OTT தளத்தில் வெளியிட அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது, இதில் விஷால் நேரில் ஆஜாராகியிருந்தார். உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்களையும் சமர்ப்பிக்கவில்லை, 15 கோடியையும் செலுத்தவில்லை, இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், 15 கோடியைத் திருப்பிச் செலுத்துவதற்கு தன்னிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்று விஷால் தெரிவித்திருந்த அதேநாளில் மினி ஸ்டுடியோவிடம் இருந்து 1 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறார். இவ்வாறு நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்திருப்பதாக விஷாலின் நடவடிக்கை குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இதற்கு விஷால் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கையில், மினி ஸ்டுடியோ அளித்த 1 கோடியே 60 லட்சம் ரூபாயில் சுமார் 90 லட்சம் ரூபாயை GST வரிக்கு செலுத்தி விட்டதாகவும், நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் பதிலளித்துள்ளார். இதனையடுத்துப் பேசிய நீதிபதி, 15 கோடியை செலுத்தா விட்டால், படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்று கூறவே, விஷாலின் சக்ரா படத்தின் OTT மற்றும் சாட்டிலைட் உரிமம் ஆகிய இரண்டும் லைகா நிறுவனத்திடமே உள்ளது,

லைகா நிறுவனம் GST செலுத்தாதால் விஷாலே GST யை செலுத்தியிருக்கிறார் எனவும், இந்த பிரச்சினைக்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினாலே முடிவு கிடைக்கும் என்றும் விஷால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதையனைத்தையும் கேட்ட நீதிபதி இறுதியாக, நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு மாறாக விஷாலின் வங்கிக் கணக்கில் விவரங்கள் இருந்தால், வரும் காலங்களில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.