இரண்டு நாட்களுக்கு முன்பு தளம் போட்டு மகிழ்ச்சியாக இருந்த விஜயகாந்த்… சிசிடிவி காட்சி பார்த்து கண் கலங்கிய மகன்..

0
Follow on Google News

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்துக்கு தினமும் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதற்கிடையே நடிகர் சங்கம் சார்பாக விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடந்தது.

இந்நிகழ்வில் கமல், விக்ரம், கார்த்தி, நாசர் உள்ளிட்ட திரையுலகை சார்ந்த பலரும் கலந்துக்கொண்டனர். மேலும் விஜயகாந்தின் இரு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் கேப்டனின் நினைவேந்தலில் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பலரும் கேப்டனுடனான தங்களின் நினைவுகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்தனர். மேலும், இவ்விழாவில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்காததும் ஒருப்பக்கம் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. அத்துடன் இந்த நினைவேந்தலில் நடிகர் சங்க கட்டிடத்துக்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் பேசியதாவது, “சின்ன வயசில், நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை விட எங்க அப்பாவை தான் நிறைய முறை பார்த்திருப்பேன்.. அப்பான்னாலே நான் ரொம்ப எமோஷனல்.. கேப்டன் எங்கேயும் போகல. நம்மகூடவே தான் இன்னைக்கு இருக்காரு. அவர் இறந்தது முதல் இந்த நாள் வரை எந்த மீடியாவிலும் பேசவில்லை. இப்பதான் முதல் முறையாக பேசுகிறேன்.

அதேபோல் எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும், நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறி போனது மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதேமாதிரி அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் எங்களுக்கு இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை.எங்களுக்கு அப்படி தான் பழக்கி இருக்கிறார். நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல, என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்றிருக்கிறார்.

அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம். ரொம்ப பெருமையா இதை சொல்வேன். காரணம், ஒவ்வொரு நியூ இயர் அன்னைக்கும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பீங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும்போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகளை தந்தேன். அதை 2024ல் கண்டிப்பா நிறைவேற்றுவேன். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் தெரிஞ்ச 2024 ரெசல்யூசனை இந்த வருடத்தில் உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவோம்.

அது என்ன என்பதை இப்பவே சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும். கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா தெரியல.. நான் ஒவ்வொரு மீட்டிங்கில் சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “விஜயகாந்துக்கு நினைவில்லை என்று பல யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றாங்க.. எல்லாமே பொய்.. அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடிகூட, வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம், தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார்.கடைசி வரைக்கும் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருந்தார். டிசம்பர் 26 வரைக்கும் “ராசாத்தி உன்னை…” பாட்டு போட்டு ரசிச்சுட்டு இருந்தார். எங்க வீட்டு டிரைவர் அண்ணாகூட சேர்ந்து தாளம் போட்டுட்டு இருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் என்கிட்ட சொல்லபோய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பார்த்தேன்.. அப்போ அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.

டிசம்பர் 26ம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், ” இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்” என்று சொல்லி விடை பெறுகிறேன். அவரது மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் கிடையாது.. கோபமும் கிடையாது” என்றார்.