தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்து புதிய சாதனை படைக்க வருகிறது விஜய்யின் லியோ. குறிப்பாக அமெரிக்கா மாநகரில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் லியோ ப்ரீ புக்கிங்கில் மட்டுமே முந்திவிட்டதாக தகவல்கள் வருகின்றன.ஒட்டுமொத்தமாக லியோ ப்ரீ புக்கிங் மூலம் 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிகின்றது. இதைத்தொடர்ந்து லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று ஒரு நாளில் மட்டுமே Book My Showவில் இந்தியாவில் மட்டுமே 1.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.
இந்த சூழலில் தற்போது லியோ படத்தின் முதல் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் குஷியில் உள்ளனர் . இந்தாண்டு ஜனவரியில் வெளியான விஜயின் ‘வாரிசு’ படத்துக்கும், அஜித்தின் ‘துணிவு’ படத்துக்கும் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த செய்தி அவர்களுக்கு ஒரு நற்செய்தியாக உள்ளது. லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் அப்படக்குழு கோரிக்கை வைத்திருந்தது.
இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு ஒரேயொரு சிறப்புக் காட்சிக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை (6 நாட்கள்), நாள் ஒன்றுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஒரே ஒரு சிறப்பு காட்சி மட்டும் இருக்க வேண்டும் என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி தொடங்க வேண்டும் என்றும், இரவு 1.30 மணிக்கு படத்தின் இறுதி காட்சி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘லியோ’ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மேலும் இதனைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைத்து சென்னை காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டுமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏதேனும் அசம்பாவிதமோ, கலவரமோ நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அனுமதி அளித்துள்ளது போல் காலை 09.00 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
லியோ படம் வெளியான அன்று திரையரங்குகளுக்கு வெளியே யாரேனும் ஆட்டம் ஆடினால் ஏதேனும் கொண்டாட்டம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், ‘நா ரெடி’ பாடலின் போஸ்டரை படக்குழுவினர் தற்போது மாற்றியுள்ளனர். கடந்த மாதம் வெளியிடப்பட்ட ‘நா ரெடி’ பாடலை விஜய் பாடியிருந்தார். இந்த பாடலுக்கான போஸ்டரில் விஜய் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிகரெட் பிடிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
மேலும் இந்த போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் தவறான ஒரு முன்னுதாரதனத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கடுமையான விமர்சித்திருந்தனர். இதனிடையே தற்போது இந்த போஸ்டர் மாற்றப்பட்டு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சிகரெட் பிடிக்காமல் துப்பாக்கியை மட்டும் பிடித்தபடி உள்ளார்.