பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சன் பிக்சர்ஸ் தற்போது, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிய ஜெயிலர் படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளது. மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீசுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் வெகு நாட்களாக ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஆகஸ்ட் 10 அன்று ஜெயிலர் படம் வெளியானது.
இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு பலரிடமிருந்து பாசிட்டிவ் ஆன கருத்துகளும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. குறிப்பாக, ரஜினியின் கெட்-அப் மற்றும் காஸ்டியூம் நேர்த்தியாக இருந்ததாகவும், ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியைப் பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து விடுகிறது என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம் இயக்குனர் நெல்சனுக்கு கம்-பேக் கொடுக்கும் ஒரு முக்கியமான படம் என்றே கூறலாம். ஏனெனில் கடைசியாக விஜய்யை வைத்து நெல்சன் எடுத்த பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்காததால், நெல்சன் பல்வேறு அவமானங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு ஆளானார். குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் மரியாதையோடு வரவேற்பு கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டார்.
அதே நிகழ்ச்சிக்கு வந்த லோகேஷ் கனகராஜ்க்கு பவுன்சர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது பவுன்சர்கள் அவர்களை வரவேற்கவில்லை. இதனால் நெல்சன் மனம் நொந்து சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. பல இணைய வாசிகள் நெல்சனுக்கு நடந்த சம்பவம் குறித்து விவாதம் செய்து வந்தனர்.
ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த் , அங்கிருந்த நெல்சனை அருகில் அமரவைத்து. விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை மோட்டிவேட் செய்தார் ரஜினிகாந்த் என தகவல் வெளியானது.
தற்போது, ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நெல்சன் ரஜினியையும், ஜெயிலர் படத்தையும் பற்றிய விஷயங்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “என் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. அத்துடன் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கண்டிப்பாக ஜெயிலர் படம் வெற்றி அடையும்” என்றார்.
கூடவே, பீஸ்ட் படத்தைப் பற்றியும் நெல்சன் மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், ” டாக்டர் படத்தை முடித்த கையோடு எனக்கு விஜய் படத்திற்கான கால்ஷீட் கிடைத்து விட்டது. பீஸ்ட் படத்திற்கு எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அதனால் அவசர அவசரமாக கதையை தயார் செய்யும் நிலைமை ஆகிவிட்டது. மேலும் சூட்டிங் ஸ்பாட்டிலும் நாங்கள் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக கிரிக்கெட் தான் விளையாடிட்டு வந்தோம்.
அதுவே பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய சரிவாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால், ஜெயிலர் படத்திற்கு எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. படத்திற்காக சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி எனக்கு நிறைய நேரம் கொடுத்து என்னை யோசிக்க வைத்தார். எனக்கு எல்லா விதத்திலும் ஒரு கம்போர்ட் சோனை உருவாக்கித் தந்தார். எனக்கு எந்த விதத்திலும் நெருக்கடியை ரஜினி கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க இது என்னுடைய படமாகவே எடுப்பதற்கு அனுமதி கொடுத்தார் என்று ரஜினியுடனான அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார்.