மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது திமுக மற்றும் அதிமுக கட்சியனரை கதி கலங்க வைத்துள்ளது. மேலும், இந்த போஸ்டர் குறித்து புஸ்ஸி ஆனந்த் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அடுத்தடுத்து நிறைய படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினரோடு மீட்டிங், தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விலையுயர்ந்த பரிசு என பல்வேறு நலத்திட்டப் பணிகள் போன்றவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தாலும், விஜய் அதை ஒருபோதும் மறுத்ததில்லை.
அதுமட்டுமல்லாமல், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மறைமுகமாக அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, கமல் வரிசையில் சினிமாவில் இருந்து அரசியலில் கால்பதிக்க நடிகர் விஜய்யும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இப்படி, நடிகர் விஜய் தனது அரசியல் பாதைக்கு அடித்தளமிட்டுக் கொண்டிருப்பது ஏற்கனவே, பல கட்சியினரிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.
இதற்கிடையில், வரப்போகும் 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் எந்த கட்சியை ஆதரிப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், பாஜக அவரது ஆதரவை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் வாக்குப் பதிவு செய்ய சைக்கிளில் வந்ததற்கே, சைக்கிள் இந்த நிறத்தில் இருப்பதால் விஜய் அந்த கட்சியினரைத் தான் ஆதாரிக்கிறார், அவர் அணிந்த மாஸ்க் இந்த நிறத்தில் இருப்பதால் அவர் இந்த கட்சியைத்தான் ஆதரிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பலரும் பலவாறு வதந்திகளைக் கிளப்பி விட்டனர்.
இப்படி சும்மா போறவரை வம்பில் இழுத்து விடத்துடிக்கும் அவரது ரசிகர்கள், தற்போது மீண்டும் ஒரு அலப்பறையை செய்து விஜயை மிகப்பெரிய சிக்கலில் இழுத்து விடப் பார்த்துள்ளனர். அதாவது, மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது….மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து…தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது.
கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரை மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் ஒட்டியிருப்பதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வம், தினகரன், வாசன், அன்புமணி, ஜான்பாண்டியன் ஆகியோர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது போல் எடிட்டிங் செய்து தெறிக்க விட்டுள்ளனர்.
இந்த ஒற்றை எடிட்டிங் மதுரை மக்களையும் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர், நடிகர் விஜய் பாஜக கட்சிக்குத் தான் ஆதரவளிக்கிறார் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், விஜய் பாஜகாவுக்கு ஆதரவளிக்கிறார் என்பது அறமற்ற பொய் செய்தி என்றும், உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரித்துள்ளார். வெறும் ரூ.150 க்கு எடிட் செய்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ள புஸ்ஸி ஆனந்த், மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் என்ற பெயரில் ஒரு பொறுப்பே இயக்கத்தில் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ் நாட்டின் உச்ச நட்சத்திரத்தின் பெயரைப் பயன்படுத்தினால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பிடித்து விடலாம் என்று ஏதோ கருப்பு ஆடு போட்ட திட்டமாகத்தான் இருக்கும் என்றும் இணையத்தில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.