அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ‛‛என் மண் என் மக்கள்” என்கிற பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அவர் பாதயாத்திரை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தற்போது அண்ணாமலையில் பாதயாத்திரை ராமநாதபுரத்தில் தொடங்கி மதுரை மாவட்டத்தில் நடந்து வருகிறது. செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார்.
இந்நிலையில் மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர். அப்போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியது. அதுமட்டுமின்றி அரசியலுக்கு வரவிருக்கும் விஜய் பாஜகவுடன் கூட்டணி மேற்கொள்ளப் போகிறாரா என்ற கேள்வியும் எழுப்பியது.
மதுரையில் நடந்த அண்ணாமலையின் பாதயாத்திரையில் விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க கொடியுடன் ஒருபக்கம் கலந்து கொண்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சர்ப்பில் அண்ணாமலை மற்றும் விஜய் இருவருடைய புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது, இதில் ஒருபக்கம் அண்ணாமலை புகைப்படமும், மறுப்பக்கம் விஜய் புகைப்படமும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்றும்.
நல்லவர்கள் இலட்சியம், வெல்வது நிச்சயம், தமிழகத்தின் வாரிசு வருக வெல்க என்கிற வாசகத்துடன், விபரீதமான விஜய் குரூப்ஸ் மதுரை என , விஜய் அன்பன்விசு என்கிற விஜய் ரசிகர் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது, இந்நிலையில் மதுரையில் விஜய்யுடன் அண்ணாமலையை இணைந்து வைத்து போஸ்டர் அடித்தது, மற்றும் அண்ணாமலை பாதயாத்திரியில் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் மன்ற கொடியுடன் கலந்து கொண்டது என இரண்டு நிகழ்வுகளும் அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு பின்னணியில் இருந்து செயல்படுவது பாஜக தான் என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த சம்பவம், அண்ணாமலையுடன் விஜய் கைகோர்த்து தமிழக அரசியலில் களம் காண இருக்கிறாரா.? என்கிற விவாதம் அனல் பறந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் அவர், “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த மாற்று கட்சி என வெளிப்படையாக புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்கவில்லை, மேலும் மதுரையில் அண்ணாமலையுடன் உடன் விஜயை இணைந்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது குறித்து புஸ்ஸி ஆனந்த் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.