என்னது சித்தார்த்துக்கு அப்படி ஒரு சம்பவமே நடந்தது தெரியாதாம்…நக்கலாக பதில் சொல்லி கடந்து சென்ற நடிகை..

0
Follow on Google News

அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’. இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பெங்களூரு சென்றுள்ளார் சித்தார்த். அங்கு ஒரு திரையரங்கில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நிலையில், கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த சிலர் உள்ளே வந்து நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தும்படி கூச்சலிட்டனர். மேலும் காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து அங்கே அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பாதியிலே வெளியேறிவிட்டார் சித்தார்த். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்த சூழலில் நடிகர் சித்தார்த்துக்கு பலரும் ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா சரத்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ‛நான் பார்க்கவில்லை” என்றார். மீண்டும் சித்தார்த்துக்கு தமிழ்நாட்டில் இருந்து நடிகர், நடிகைகள் யாரும் எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை” என கேள்வி எழுப்பிய போது, ‛‛அப்படியா.. எனக்கு கடந்த 3 நாட்களாக உடல்நலம் சரியில்லை – அதோடு விளம்பரம் தொடர்பான பணியில் பிஸியாக இருந்தேன் – ஏதோ கேள்விபட்டேன் சித்தார்த் பற்றி – சித்தார்த் பொறுமையாக உட்கார்ந்து கொண்டிருந்தார்” என்றார்.

சித்தார்த் சம்பவம் குறித்து தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி கர்நாடக நடிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தும், இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கூறிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் நடிகர் தாக்கப்பட்டது தெரியாது என கூறுவது வியப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் நடிகை ராதிகா சரத்குமாரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை கடற்கரையில் உலக இதய தினத்தையொட்டி நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி கலந்து கொண்டனர்.

அப்போது, கன்னட அமைப்புகளால் சித்தார்த் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் நடிகர் ஆதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சினிமா, நடிகர் என்பதை எல்லாம் தாண்டி எல்லோரும் ஒன்று தான். மாநிலங்களுக்கு இடையே உள்ள பெயர்கள் எல்லைகளை பிரிப்பதற்காகவும், நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எல்லோரும் ஒன்று தான். முக்கியமாக சினிமா நடிகர்களை தடுப்பது என்பது தவறான ஒன்று. அதை நாம் செய்தலும் தவறு தான். அவர்கள் செய்ததும் தவறு தான்” என்றார்.

இந்நிலையில் சித்தார்த் முதன் முறையாக இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது- ஒரு தயாரிப்பாளராக, திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாக எனது சித்தா படத்தை பலருக்கு திரையிட்டேன் என்பது இதுவே முதல் முறை. இது சென்னை மற்றும் கொச்சியில் ஊடகங்களுக்கு எனது படம் காண்பிக்கப்பட்டது. பெங்களூருவிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டம் இருந்தது. படத்தை ரிலீசுக்கு முன்பாக சுமார் 2,000 மாணவர்களுக்குக் காட்ட திட்டமிட்டிருந்தேன்.

கன்னட நட்சத்திரங்களுக்கும் படத்தை திரையிடும் திட்டமும் இருந்தது. ஆனால், பந்த் நடைபெற்று கொண்டிருப்பதால் மரியாதை நிமித்தமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது, ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது.

சித்தா படத்தின் புரொமோஷனுக்காக அதனை சிலருக்கு காண்பிக்க வேண்டும். ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். கன்னட அமைப்பினரால் நான் வெளியேற்றப்பட்டேன். இது பல கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. நான் இது பற்றி பேச விரும்பவில்லை. சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கவனத்தை சிதறடிக்கும் விதமாக எதையும் பேச விரும்பவில்லை. என் படத்துக்கும் கர்நாடகாவில் நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பணத்தை செலவழித்து நான் தயாரிக்கும் படங்களில் எனது சமூகப் பொறுப்பு வெளிப்படும் என்று நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.