உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் விடாப்பிடியாக இருந்து போராட்டம் நடத்தி அணையை திறந்து விடாமல் இருக்கும் கர்நாடகா ஒருபுறம் என்றால், காவிரி நீர் ஆறுகளில் பாயாமல் விவசாயம் எப்படி பார்ப்பது என்று தவிக்கும் தமிழ்நாடு ஒருபக்கமாக இருக்கிறது. தற்போது தென்னிந்தியா முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் காவிரி நதி நீர் பிரச்சினையால், தமிழ்நாடு, கர்நாடகா இடையே பரபரப்பு நிலவி வருகிறது.
ஒவ்வொரு முறையும் காவேரி பிரச்சினை ஓங்கும் போதெல்லாம், தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, பிரதான துறையான சினிமாவில் உள்ள பிரபலங்கள் அல்லது தமிழ் நடிகர் சங்கம் காவிரி நதி நீர் வேண்டி போராட்டம் நடத்தும். ஆனால், இந்த முறை நடிகர் சங்கம் அமைதி காத்து வருவது தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான், நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது, தடாலடியாக உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து நடிகர் சித்தார்ர்த்தை அங்கிருந்து வெளியேற்றினர். கன்னட அமைப்பினரின் இத்தகைய செயலுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சித்தார்ர்த்திடம் மன்னிப்பு கேட்டார். அவரைத் தொடர்ந்து கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரும் கன்னட மக்கள் சார்பாக மன்னிப்ப்பு கேட்டார்.
ஆனால், இதுவரை தமிழ் நடிகர் சங்கம் சார்பாக இதுவரை ஒரு நடிகர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. சித்தார்த்துக்கு ஆதரவாக மட்டுமின்றி, காவிரி நீர் பிரச்சினை தொடர்பாகவும் ஒரு தமிழ் சினிமா நடிகர் கூட வாயைத் திறககவில்லை என்பது மக்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கர்நாடகாவில் கன்னட திரையுலகைச் சார்ந்த பலரும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரமாட்டோம் எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முன்பு, தமிழ் நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டமும் இந்த முறை நடக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால், இப்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அத்துனையும் மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய பன்மொழிகளில் வெளியாகி வருகிறது. ஆகவே, கர்நாடகா மாநிலத்திற்கு எதிராக ஏதேனும் தெரிவித்தால் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும், கோடிகளை அல்ல முடியாது என்பதாலுமே முன்னணி தமிழ் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அமைதி காத்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக நடிகர் சத்யராஜ் கடந்த காலங்களில் எப்போதெல்லாம் காவேரி விவகாரம் தலை தூக்கியதோ அப்போதெல்லாம் நரம்பு புடைக்க கர்நாடகாவுக்கு எதிராக பொங்கி எழுவார், ஆனால் தற்பொழுது மூச்சு விடாமல் அமைதியாக இருப்பதற்கு பின்னணியில், சத்யராஜ் கட்டப்பாவாக நடித்த பாகுபலி படம் வெளியான பின்பு தமிழ் நடிகராக இருந்த சத்யராஜ் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார்,
அந்த வகையில் தற்பொழுது பிற மொழி படங்களிலும் கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் சத்யராஜ் காவேரி விவகாரத்தில் பழைய படி நரம்பு புடைக்க பேசினால் கர்நாடகாவில் தன்னுடைய படம் ஓடாது என்பதால், இதனால் மிக பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் தான் கப் சிப் என, காவேரி தண்ணீர் கொடுத்த என்ன.? கொடுக்கலன என்ன.? அடுத்து படத்துக்கு அட்வான்ஸ் வாங்கு என சினிமாவில் பிசியாகி விட்டார் சத்யராஜ் என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு பின்பு கன்னட அமைப்பினரிடம் சரண்டர் அடையும் விதத்தில் சத்யராஜ் வீடியோ வெளியிட்ட சம்பவமும் அரங்கேறியது, அந்த வகையில் ஏற்கனவே பட்டது போதும் சாமி, காவேரி விவகாரத்தில் நமக்கெதுக்கு பிரச்சனை என சத்தியராஜ் அமைதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.