தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக சுமார் 30 வருடங்களுக்கு மேல் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டியில் பல நடிகர்கள் இருந்து வந்தாலும், கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இடையில் ரஜினி – விஜய் இடையிலான உரசல் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இதெல்லாம் ரஜினிகாந்த் பெரிதாக பொருட்படுத்து மாட்டார், அவர் இருக்கிற உயரத்துக்கு இதெல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார் என பலர் நினைத்திருக்க, சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளில் சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு விஜய்க்கு பதிலடியாக அமைத்தது, அதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜய்யை பொலந்து கட்டிவிட்டார் ரஜினி என்று சொல்லும் அளவுக்கு அமைத்திருந்தது அவரின் பேச்சு.
இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கு பின்பு,விஜய் – ரஜினி ரசிகர்களுக்கு இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் அமைத்துள்ளது தயாரிப்பாளரும், நடிகர் சிவகுமார் குடும்ப உறவினருமான எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ள கருத்து. சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.ஆர்.பிரபு “திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது என்றும்,
மேலும், ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். ஒவ்வொரு படத்துக்கும், வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பு மாறுபடும். இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையும் உயர்கிறது அத்துடன் எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது என தெரிவித்துள்ள எஸ்.ஆர்.பிரபு.
மேலும், இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரையுலகம். அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இது ஒரு புதிய விதிமுறையாகும்போது வர்த்தகம் மற்றும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்துக்கு உயரும் என்றும் நம்புகிறேன்” என எஸ்.ஆர். பிரபு தெரிவித்து இருந்தார்.
அதில் திரைப்பட வியாபாரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது என்று எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளது, ரஜினியை நேரடியாகவே தாக்குவது போன்று அமைத்துள்ளது. குறிப்பாக சிவகுமார் குடும்பத்தின் உறவினர் மற்றும் நடிகர் கார்த்திக்கு மிக நெருக்கமானவராக சினிமா வட்டாரத்தில் அறியப்படும் எஸ் ஆர் பிரபுவுக்கு ரஜினிகாந்த் மீது ஏன் இந்த கோபம் என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜை மாநகரம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் எஸ்.ஆர்.பிரபு, அதனை தொடர்ந்து கைதி படத்தில் நடிகர் கார்த்திக்யை நடிக்க வைத்து, லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது அந்த படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு. இந்நிலையில் கைதி 2 படத்தை எடுக்க நீண்ட நாட்களாக லோகேஷ் கனகராஜுக்காக காத்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு, இதற்காக கார்த்திக்யிடம் கால் சீட்டும் பெற்று வைத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு.
லியோ படத்தை முடித்துவிட்டு கைதி படத்தை தொடங்கலாம் என லோகேஷ் உறுதி கொடுத்திருந்த நிலையில், தற்பொழுது அதற்கு வெட்டு வைக்கும் விதத்தில் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து நம்ம ஒரு படம் பண்ணலாம் என ரஜினி வற்புறுத்தியுள்ளார். தனக்கு கைதி 2 கமிட்மென்ட் உள்ளது என லோகேஷ் கனகராஜ் எவ்வளவோ எடுத்து சொல்லியும், அதெல்லாம் அடுத்து பண்ணிக்கலாம் என லோகேஷை கட்டாய படுத்த தவிர்க்க முடியமால் லோகேஷ் ஓகே செய்துவிட்டார்.
இந்நிலையில் இதனால் கைதி 2 படம் மிக பெரிய கேள்வி குறியாகிவிட்டது, ஒரு இயக்குனரை நாங்கள் கமிட் செய்துள்ளோம் என்று தெரிந்தும் அவர்கள் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன என்பது போல் ரஜினிகாந்த் லோகேஷ் கங்கராஜை தன் பக்கம் இழுத்து போட்டது தான் எஸ்.ஆர்.பிரபுவுக்கு ரஜினி மீது கோபம் என்றும், அதன் வெளிப்பாடு தான் எஸ் ஆர் பிரபு சூப்பர் ஸ்டார் குறித்து கருத்து தெரிவித்து ரஜினியை மறைமுகமாக பொலந்து கட்டியது என கூறப்படுகிறது.