மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் காளை, திமிரு, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ஜெயிலர் படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
கேரளாவில் நடிகர் விநாயகன், சர்ச்சைகளில் இன்று நேற்றல்ல.. 2019-ம் ஆண்டு முதலே மையம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவடைந்த தருணம்.. தொட்டப்பன் என்ற படம் ரிலீஸாக இருந்தது. அந்த திரைப்படம் தொடர்பான புரமோஷன் பேட்டி ஒன்றில் விநாயகன் பகிரங்கமாக அரசியல் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. இந்த சர்ச்சை நடந்த அதே கால கட்டத்தில், தலித் பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை தொலைபேசியில் அவதூறாக விமர்சித்ததாக நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கல்பேட்டா காவல் நிலையத்தில் இந்த பஞ்சாயத்து 2019-ல் நிகழ்ந்தது. இந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது.
அதேபோல கடந்த ஆண்டு மீ டூ பிரச்சனை குறித்து நடிகர் விநாயகன் பகீர் கருத்துகளை தெரிவித்திருந்தார். அப்போது பிரஸ் மீட் ஒன்றில், திருமணத்துக்கு முன் யாரும் உடலுறவில் ஈடுபடவில்லையா? இங்கே இருக்கிற யாராவது திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்திருந்தீர்களா? என பொதுவெளியிலேயே கேள்வி கேட்டார். இதற்கு செய்தியாளர்களில் ஒருவர் அப்படி எல்லாம் நான் உடலுறவு வைத்தது இல்லை என கூறிய போது அவரை இழிவுபடுத்தி பேசினார் விநாயகன்.
4 மாதங்களுக்கு முன்னர் கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்த போதும் சர்ச்சையில் விநாயகன் சிக்கினார். உம்மன் சாண்டி மறைவுக்காக கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு 3 நாட்கள் துக்க தினம் அறிவித்தது. இது தொடர்பாக வீடியோ பதிவிட்டிருந்த நடிகர் விநாயகன், உம்மன் சாண்டி யாருங்க? அவர் மறைவுக்கு எதுக்கு இப்படி கவரேஜ் செய்யனும்? ஊடகங்கள் இதையெல்லாம் நிறுத்தனும் என ஏகத்துக்குமாக பேசியிருந்தார். இது கேரளா காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்தது.
இதனால் நடிகர் விநாயகன் வீடும் தாக்குதலுக்குள்ளாகி பெரும் சர்ச்சையானது. பின்னர் தமது வீடியோ பதிவை விநாயகன் நீக்கி விட்டார். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது போன்று அவரது சர்ச்சைகள் ஏராளம். இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் அவர் ஆஜரானார்.
நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இன்று அவர் வசித்துவரும் எர்ணாகுளம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்கள் எர்ணாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, மீண்டும் அங்கு சத்தம் போட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் விநாயகன் மது போதையில் இருந்தது உறுதியானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட விநாயகனிடன் எர்ணாகுளம் நார்த் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள் போலீஸார். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தகராறு செய்ததாக `ஜெயிலர்’ வில்லன் நடிகர் விநாயகன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.