நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள குறித்து பார்த்திபன் வெளியிட்ட செய்தியில், “இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல, அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக, நானும் மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு.
கிட்டத்தட்ட 120 அனைத்துலக விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட, நம் தேசிய விருது என்கிறபோது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதில் என்னுடைய படத்தின் பெயர் இடம்பெற்றதில் மகிழ்ச்சி. அதில் என் பெயர் இருப்பதும் மகிழ்ச்சி,” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 120 சர்வதேச விருதுகள் இரவின் நிழல் படத்திற்கு கிடைத்துள்ளது என பார்த்திபன் தெரிவித்துள்ளது குறித்து விமர்சனம் செய்துள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
கோடம்பாக்கத்தின் இன்னொரு ராட்சச சைஸ் வடை என்றும், இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஆன்லைன் சான்றிதழ்கள் எத்தனை? நேரில் தரப்பட்ட விருதுகள் எத்தனை? ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் (வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை).. இவற்றுள் பெரும்பாலானவை திடீரென்று உருவாக்கப்பட்ட உப்மா வெப்சைட் மற்றும் உப்மா அமைப்புகள் தந்தவைதானே?
இந்த கேள்விக்கு நாம் பலமுறை பதில் கேட்டும் இதுவரை பதில் வரவே இல்லை. அப்படியென்றால் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் ஊடகத்தினரை பட்டப்பகலில் ஏமாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாமா?படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது. இதற்கான ஆதாரங்களை இன்றுவரை இவரிடம் ஒரு பத்திரிகை அல்லது ஊடகம் கூட ஏன் கேட்கவில்லை?
இதோ நான் மீண்டும் கேட்டுள்ளேன். 120 விருது வாங்கியதற்கான மொத்த ஆதாரங்களுடன் ப்ரெஸ் மீட் கூட்டி நிரூபிக்க முடியுமா சார்? நிலைமையை சமாளிக்க அவசர அவசரமாக போட்டோஷாப் பட்டியல் ரெடியாகுமா அல்லது இரண்டாம் ஆண்டை நோக்கி இந்த பலத்த மௌனம் பயணிக்குமா?வாய்ல புண்ணா? மௌன விரதமா?
பார்த்திபன் சார்.. நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகள் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டன? ஒவ்வொன்றிற்குமான அதிகாரப்பூர்வ வெப்சைட் பட்டியலை வெளியிடுவீர்களா? இந்த சர்வதேச விருதுகளை வழங்கியவர்கள் யார்? அவற்றின் அல்லது அவர்களின் பெயரென்ன? 120 விருது கமிட்டிகளின் தலைவர் அல்லது பொறுப்பாளர்கள் கையெழுத்திட்ட உண்மையான சான்றிதழ்களை ப்ரெஸ் மீட் வைத்து நிருபர்களுக்கு காட்ட முடியுமா?
ஒவ்வொரு விருது அமைப்பும் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?’ஆம். நாங்கள்தான் விருது தந்தோம் என 120 விருது கமிட்டிகளின் தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்கள் .. வீடியோ மூலம் பேட்டி தந்து உங்கள் மீதான சந்தேகத்தை போக்குவார்களா? ஒவ்வொரு கேள்விக்கும் மனசாட்சியுடன் நேர்மையா பதில் சொல்லுங்க சார். இல்லைன்னா நீங்க சொன்னது பச்சைப்பொய் என்றுதான் அனைத்து தமிழர்களாலும் உணரப்படும்.
இந்த ஆதாரங்களை திரட்டித்தர ஒருநாளே அதிகம். இதை உங்கள் உதவியாளர்கள் எளிதில் செய்து விடலாம். புதிய தகவலை தேட அவசியமே இல்லை. விருது வாங்கியதற்கான அங்கீகாரங்கள் உங்களுக்கு மெயில் மூலம் வந்திருக்கும். அவற்றை மீடியாவுக்கு forward செய்தாலே போதும். கணக்கு 120 ஆக இருக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்றே பொருள்படும். என ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்துள்ளார்.