அஜித்துடன் இணையவேண்டிய தருணத்தில் மாரிமுத்து மரணம்…

0
Follow on Google News

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57. தான் நடித்து வந்த எதிர்நீச்சல் மெகா சீரியலுக்கான டப்பிங் பணி முடிந்து வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இவரது சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்தில் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாரிமுத்து, ஆணாதிக்கமும் சாதிய மனப்பான்மையும் மிகுந்த தமிழ் ஆண்களின் உருவமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். அவர் எடுத்தவுடன் இமயம் செல்லவில்லை. அவர் கடந்து வந்த பாதை ஆனது முட்களால் ஆனது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே சிங்கராஜபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து.

சினிமா ஆசையால் இன்ஜினியரிங் படித்து முடித்த உடனே சென்னை வந்தார். அங்கு பாரதிராஜாவிடம் எப்படியாவது உதவி இயக்குனர் ஆகிவிடும் என்று முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை. பின் ராஜ்கிரனிடம் உதவி இயக்குனராக பணியை தொடங்கினார். அந்த சமயம் வெளியான ரோஜா படத்தை பல திரையுலகினரை எதிர்த்த போதிலும் அதனை சப்போர்ட் செய்து பலரிடம் பேசினார்.

இதனால் ராஜ்கிரனிடமிருந்து வேலை பறிபோனது.‌ அதனைத் தொடர்ந்து வசந்த் உடன் உதவி இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தார். இயக்குனர் வசந்த்திடம் எஸ்.ஜெ சூர்யா மற்றும் மாரிமுத்து இருவரும் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். அதன் பிறகு எஸ்.ஜெ சூர்யா வாலி மற்றும் குஷி படத்தை இயக்கும் போது அவரின் உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றியுள்ளார். மேலும் அப்போது இயக்குநர்களாக ஜொலித்த ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், உள்ளிட்டோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் அஜித் குமார் உடன் ஆசை மற்றும் வாலி ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். நீண்ட காலம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து 2008 ஆம் ஆண்டு பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை கொடுத்தது. அதில் வரும் வடிவேலு காமெடி இன்றளவும் எவர் க்ரீன். இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் புலிவால் படம் ரிலீஸ் ஆனது. படங்கள் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாததால் நடிப்பு துறையில் களம் இறங்கினார்.

குணச்சித்திர வேடங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகி ஆனந்தியின் தந்தையாக நடித்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக க்ளைமேக்ஸில் வரும் காட்சி இன்று வரை அனைவராலும் ஸ்டேட்டஸில் போடப்படுகிறது. திரைப்பட துறையை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் வெளியாகும் எதிர்நீச்சல் மெகா சீரியல் மூலம் மிக பிரபலமாக பேசப்பட்டார்.

குறிப்பாக “இந்தாம்மா.. ஏய்..” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. கண்டிப்பாக தினமும் ஒரு மீம்ஸில் ஆவது இது வந்து விடும். சமீபத்தில் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான “ஜெயிலர் ” திரைப்படத்தில் வில்லனுக்கு வலது கையாக, உதவியாளராக படம் முழுக்க வந்து நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

தற்போது சிறிது காலம் முன் ஒரு பேட்டியில் பேசிய இவர், அஜித்துடன் தன்னுடைய நட்பு தொடர்வதாகவும் சமீபகாலமாகத்தான் அவரை சந்தித்து பேச முடியவில்லை என்றும் தெரிவித்து அவர் அஜித்துடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறேன் அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது இவர் மரணம் அடைந்து விட்டதால் அஜித்துடன் பேச வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாத ஆசையாகிவிட்டது.