தீபாவளிக்கு கைதி, சர்தார் ரேஞ்சுக்கு படம் கொடுத்து வந்த கார்த்திக்கும் அடி சறுக்கும் என்கிற நிலையாகவே மாறிவிட்டது இந்த ஜப்பான் திரைப்படம் அமைந்துள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். மேலும் இதில், ஜெய்லர் படத்தில் நடித்த தெலுகு நடிகர் சுனில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகன் இந்த முறை கமர்சியல் பார்முலாவில் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் முன்னணி கமர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைய ஜப்பான் மூலம் முயற்சி செய்திருக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்றால் சந்தேகமே!
கார்த்தியின் 25வது படம் என்றும் ஆடியோ லாஞ்சில் அத்தனை பிரபலங்களையும் அழைத்து வந்து பெரியளவில் பில்டப் கொடுத்த நிலையில், அதற்கெல்லாம் உரிய படமாக ஜப்பான் அமையவில்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக மாறியுள்ளது. கோவையில் ஒரு பிரமாண்ட நகைக்கடையில் ரூ. 200 கோடி மதிப்புள்ள நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் இந்த கடையில் பங்கு உள்ளதால் போலீஸ் தீவிரமாக களம் இறங்குகிறது. ஒருபக்கம் சுனில் வர்மா, மறுபக்கம் விஜய் மில்டன் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தி மெகா கொள்ளையன் ஜப்பான் (கார்த்தி) தான் இதை செய்தது என கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கார்த்தி இதை செய்யவில்லை என தெரியவர, அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் தான் மீதி கதை.
கதையின் ஒன்லைன் எளிமையாக இருந்தாலும், அதன் ஸ்க்ரீன் பிளேவில் இயக்குநர் புகுந்து விளையாடி சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் படம் நல்லாவே வந்திருக்கும். ஆனால், அதை ஏன் நான் பண்ணனும் என அவர் ஒதுங்கிக் கொண்டது தான் மொத்த பிரஷரும் கார்த்தி தலை மீது வந்து விழுந்திருக்கிறது. ஒரு கதாபாத்திரமாக காஸ்ட்யூம், பல் செட், ஹேர் ஸ்டைல், கூலர்ஸ் என ஜப்பான் கதாபாத்திரம் ஒரு புதுவித அனுபவம். அந்த கதாபாத்திரத்திற்கு தன்னாலான நியாயத்தைச் செய்திருக்கிறார் கார்த்தி. அவர் அடிக்கும் சில ஒன்லைனர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
எவ்வளவு சீரியஸான சிச்சுவேசனாக இருந்தாலும், அதை ஜாலியாக கடந்துபோவது ஜப்பான் ஸ்டைல் . கௌதம் மேனன் வாய்ஸ் ஓவர்போல் படம் முழுக்க வரும் இந்த வித்தியாச மாடுலேசன்தான் ஓவர் டோஸாகிவிட்டது. படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து போகப் போக கொஞ்சம் கொஞ்சம் வேகம் எடுத்துள்ளது. பின்பு இதை சரிகட்டும் விதமாக இரண்டாம் பாதி அமைந்து சற்றே நமக்கு ஆறுதல் அளித்துள்ளது.
படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரிய திருடன் என்று வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியிருக்கும் இயக்குநர் அதற்கான எந்த ஒரு செயல்பாட்டையும் படம் முழுவதிலும் ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒரு அதிரடியான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், ஏனோ திரைக்கதையில் அந்த அதிரடியை காட்டாமல் மிகவும் தொய்வாகவும் அதே சமயம் பல்வேறு லாஜிக் மீறல்களோடும் படத்தை உருவாக்கியுள்ளார்.
படத்தில் நாயகி கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை. அதேபோல் நாயகன் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வியாதி இருப்பதுபோல் காட்டியிருப்பது படத்திற்கு அது எந்த வகையில் உதவி புரிந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பல இடங்களில் கதையை தாண்டி படம் எங்கெங்கோ பயணிக்கிறது. எமோஷனல் காட்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆங்காங்கே வரும் அரசியல் வசனங்கள் பளார்.
ஸ்க்ரிப்படை பொறுத்தவரை இந்த நகை திருட்டு ஐடியா நன்றாக இருக்கிறது. ஆனால் அதை திரையில் காட்டியபோது அது நம்மை அவ்வளவாக கவரவில்லை. முதல் பாதியில் வரும் ஜப்பான் தொடர்பான காட்சிகள் எடுத்த எடுப்பிலேயே நம்மை கவரவில்லை. ராஜு முருகனின் முந்தைய படங்களில் இருந்த அழுத்தமும், ஏதார்தமும் மிஸ்ஸிங். மொத்தத்தில் தீபாவளிக்கு ஒரு சுமாரான படமாக ஜப்பான் வெளிவந்துள்ளது.