தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். இன்றளவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித், வெள்ளத்தில் தத்தளித்து வரும் வட தமிழக மக்களுக்கு எந்த ஒரு நிவாரண உதவியும் வழங்க முன்வரவில்லை. இதனால் இணையவாசிகள் பலரும் அஜித்தை விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவரது ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும், AK என்றும் அழைத்து வருகின்றனர்.
என்னதான் திரைத்துறையில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் இருந்தாலும், ரசிகர்கள் மன்றம், மீடியா மற்றும் மேடை நிகழ்ச்சி போன்றவற்றில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். சொல்லப்போனால் படத்தின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா வெற்றி விழா என எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருக்கிறார். நடிகர் அஜித் இப்படி அலாதியாக வாழ்ந்து வந்தாலும், அவரது ரசிகர்கள் இப்போது வரை வெறித்தனமாக அவரது படங்களை கொண்டாடி வருகின்றனர்.
இப்படியான நிலையில், வங்கக் கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தால் இரண்டு நாட்களாக இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை உட்பட அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.
அதே சமயம், சென்னை காரப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் ஆகியோரை தமிழக தீயணைப்புத் துறையினர் நேற்று பத்திரமாக மீட்டனர். இதை அறிந்த அஜித் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் கமிட்டி ஹாலுக்கு செல்வதற்கு காரையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த இணையவாசிகள் ரசிகர்களால் தானே இன்றைக்கு 100 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்குகிறீர்கள். ஆனால் அதே ரசிகர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, சிறிதும் கண்டு கொள்ளாமல் சக நடிகர்களுக்கு ஓடோடி உதவி செய்தது சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல சமூக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட தமிழகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், நடிகர் அஜித் இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வரவில்லை என்பது அவரது ரசிகர்களையும் மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் பலருக்கு மறைமுகமாக உதவி செய்து வாழ வைத்துள்ளார் என்கிற செய்தி அவ்வப்போது செய்திகளில் வெளிவரும். ஆனால் இப்போது நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்ய நினைக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் அஜித்தை விமர்சித்து வருகின்றனர்.