மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதில் ஸ்டாலின் கூட இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை அறியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலை வசதியும் போடப்பட்டு உள்ளது. தற்போது ஜப்பான் நிறுவனம் பலமுறை அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.
அதிமுக அரசை குறை சொல்வது தான் ஸ்டாலினின் பணியாக உள்ளது. ஸ்டாலின் வெளிநாடுகளில் சிகிச்சை எடுக்க தேவையில்லை. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம். கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் காய்கறி விளைச்சல் அதிகம். ஸ்டாலினின் அறிக்கைகள் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் மறைக்க முடியாது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக சட்டசபையில் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரவில்லை. பொது மன்றத்தில் பேசவில்லை. அது முதலமைச்சர் சிந்தனையில் உதித்தது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்து அதன்மூலம் சமூக நீதி காத்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.
முதலமைச்சரின் வெற்றியை ஸ்டாலின் ஒருபோதும் பங்கு போட முடியாது.ஸ்டாலினால் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல காரியமும் நடக்கவில்லை. இனியும் நடக்கப் போவதில்லை. தீபாவளி பண்டிகையை மக்கள் மிக கவனத்துடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.