ஒடிசாவில் இடைதேர்தல்… வெற்றி பெறுமா பாஜக.? கள நிலவரம் என்ன.?

0
Follow on Google News

ஒடிசா : ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான நவீன் பட்நாயக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நடந்துமுடிந்த ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல்களில் பிஜேபி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை.இருந்தபோதிலும் பிஜேபியின் வாக்கு வங்கி சற்றே உயரத்தொடங்கியுள்ளது சமீபத்திய கருத்துக்கணிப்புக்களில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் ஜார்ஜுகுடா மாவட்டத்தில் உள்ள பிராஜ்ராஜ் சட்டமன்ற தொகுதியில் மே 31 அன்று இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான வேட்பாளர் தேர்வு புதுதில்லியில் உள்ள பிஜேபி தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. பலகட்ட பரிசீலனைக்கு பிறகு வரவிருக்கும் இடைத்தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாராணி பாண்டாவை தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது.

பிராஜ்ராஜ் பகுதியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற மற்றும் ஊராக தேர்தலில் பிஜேபி தோல்வியடைந்திருந்தது. ஆனால் ராதா ராணி பாண்டாவின் மக்கள் பரிச்சயம் மற்றும் அவரின் நிர்வாக திறன் வெற்றியை பெற்றுத்தரும் என தலைமை கணக்கிட்டுள்ளது. ராதா ராணி பாண்டா கடந்த 2014ல் பிஜு ஜனதா தள் வேட்பாளர் அனுப்குமார் சாயை தோற்கடித்து தொகுதியை வென்றார்.

இருந்தபோதிலும் 2019 சட்டமன்ற தேர்தலில் பிஜேடியின் கிஷோர் மொஹந்தியிடம் 11,634 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடந்த 2021 டிசம்பரில் கிஷோர் மொஹந்தி மரணமடைந்தார். அவரின் மறைவை தொடர்ந்து பிராஜ்ராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பிஜேடியும் காங்கிரசும் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

ஆனால் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சபாநாயகர் கிஷோர் படேலை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது என கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளும்கட்சி சார்பில் மறைந்த மொஹந்தியின் மனைவி நிற்க வாய்ப்பு கேட்டு ஆளும்கட்சி மறுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மே 31 நடைபெறும் இந்த இடைத்தேர்தல் காலை 7 முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.