ராஜஸ்தான்; ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராஜஸ்தானில் சமீபகாலமாக தலித்துகளுக்கெதிரான வன்முறையும் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமைச்சர் ஒருவரின் மகனே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோஹித் ஜோஷி. இவர்மீது டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அந்த இளம்பெண் அளித்துள்ள புகாரில் “முகநூல் மூலம் ரோஹித்துடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் ரோஹித் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். அதையடுத்து அவரை நான் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவர் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அவரது சதி தெரியாமல் நான் குடித்ததும் மயங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில் நான் எழுந்ததும் ரோஹித் எனது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் காட்டி மிரட்டினார். கடந்த வருடம் ஜனவரி 8 முதல் 2022 ஏப்ரல் 17 வரை என்னை பலமுறை பலவந்தப்படுத்தி மிரட்டி கற்பழித்தார். இதில் நான் கர்ப்பமானதும் என்னிடம் ஒரு மாத்திரையை கொடுத்து கருவை கலைக்கவைத்தார். திருமண ஆசை காட்டியே என்வாழ்க்கையை சீரழித்துவிட்டார்” என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
டெல்லி சதார் பஜார் காவல்நிலையத்தில் முதலில் எனது புகாரை ஏற்கமறுத்தனர். பின்னர் எனது புகாரை ஏற்றுக்கொண்டு வழக்கு பதிந்துள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். அமைச்சருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் போலீசார் வலைவீசி தேடினர்.
ரோஹித் அங்கிருந்து தப்பியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் ஜோஷி “மீடியாக்கள் இந்த வழக்கு தொடர்பான யூகங்களை விட்டுவிட்டு காவல்துறையை அவர்கள் பணியை செய்யவிடுங்கள். காவல்துறை உறுதியாக நீதியை நிலைநாட்டும்” என தெரிவித்தார்.
மாநில எதிர்கட்சித்தலைவர் மற்றும் பிஜேபியின் முக்கிய தலைவரான குலாப் சந்த் கட்டாரியா செய்தியாளர்களிடம் ” இது காங்கிரசின் கலாச்சாரம். குற்றவாளியை தப்பிக்கவைத்து வழக்கை இழுத்து மூட வேலைநடக்கிறது. இது மாநிலத்தின் துரதிஷ்டம்” என தெரிவித்துள்ளார்.