உத்தர பிரதேச மாநிலத்தில் அர்ச்சகர் ஒருவர் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பொது மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை மிக வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்பவ தினத்தன்று மருத்துவமனைக்கு வந்த தீவிர கடவுள் பக்தி கொண்ட நபர் ஒருவர் கையில் உடைந்த கிருஷ்ணர் சிலையை வைத்திருந்துள்ளார்.
அந்த சிலை தினமும் தன் வீட்டில் வணங்கும் கிருஷ்ணர் சிலை என்றும் அன்று பூஜை செய்த போது கிருஷ்ணரின் கை உடைந்துவிட்டதாகவும் அதனால் சிலைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் எனவும் கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.மருத்துவர்கள் சிலைக்கு எல்லாம் இங்கு சிகிச்சை எல்லாம் அளிக்க முடியாது என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்நபர் கேட்பதாக இல்லை.
தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்ததால் அவரை அனுப்ப வேண்டும் என்பதறகாக மருத்துவமனை பதிவேட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பெயரை பதிவு செய்து உடைந்த சிலையின் கையைப் பேண்டேஜ் போட்டு ஒட்டி அனுப்பியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கேலிகளுக்கும் ட்ரோல்களுக்கும் ஆளாகியுள்ளது.