ஹனுமான் சாலிசா..! கர்நாடகாவில் மீண்டும் பதட்டம்

0
Follow on Google News

கர்நாடகா : உத்திரபிரதேச மாநிலத்தைப்போல் கர்நாடகாவில் உள்ள வழிபாட்டு தலங்களில் அமைந்திருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும். இல்லையெனில் பொதுமக்களுடன் சேர்ந்து கோவில்களில் ஹனுமான் சாலிசா மற்றும் பக்திப்பாடல்கள் பாடப்படும் என ஸ்ரீராம் சேனா அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஸ்ரீராம் சேனா மாநில தலைவர் முத்தாலிக் அறிவித்திருந்தபடி தனது தொண்டர்கள் மற்றும் ஹிந்து தன்னார்வலர்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் ஒலிபெருகிகளுக்கு எதிராக கோஷமிட்டவாறு ஹனுமான் சாலிசா பாடத்தொடங்கினர். அதையடுத்து மாநிலம் முழுவதும் கர்நாடக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வகுப்புவாத வன்முறையை தூண்டலாம் என கருதிய போலீசார் மாநிலம் முழுவதும் பதட்டமான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் ஹனுமான் சாலிசா பாட முயன்ற ஹிந்து அமைப்பினரை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் ஸ்ரீராம் சேனா நிறுவனத்தலைவர் பிரமோத் முத்தாலிக் மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒருகோவிலில் நேற்று காலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஹனுமான் சாலிசா மற்றும் சுப்ரபாதம் மற்றும் காலை பிரார்த்தனைகள் செய்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி வரும் நாட்களில் தன்னார்வலர்கள் கோவில்களில் பிரார்த்தனை பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “அதிகாலையில் மசூதிகளில் எழுப்பப்படும் ஆசானால் நோயாளிகள் மற்றும் மாணவமாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காங்கிரஸ் இஸ்லாமிய மக்களை தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பவைத்துள்ளது.காங்கிரசும் அவர்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என தெரிவித்தார்.

ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து தற்போது ஒலிபெருக்கி ஹனுமான் சாலிசா சர்ச்சைகள் தொடர்ந்திருப்பதால் மதமோதல் ஏற்படாமலிருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.