பிரெயின் அட்டாக் மூளைக்குச் செல்கின்ற ரத்த நாளங்களில் ஏற்படும் தடை மற்றும் மூளைக்குள் ஏற்படும் ரத்தக்கட்டுதான் ஸ்ட்ரோக் / பக்கவாதத்தை உண்டாக்குகிறது. இதனால் மூளைச் செல்கள் பிராண வாயுவின்றி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன.
அந்தப் பெண்மணிக்கு வயது 34. கணவர், 2 குழந்தைகள், ஐ.டி.யில் வேலை என்று அமைதியான வாழ்வு. காலை 8 மணி, சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தவரின் வலது பக்க கை மற்றும் கால் திடீரென செயலிழந்துபோக, கிச்சனில் நிலைகுழைந்து விழுந்தார். இனி அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு முக்கியம், காரணம் அவருக்கு வந்திருப்பது ‘பிரெயின் அட்டாக் (Brain Attack)’!
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அவருடைய கணவர் அவசர அவசரமாக சென்னை ‘கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’ மருத்துவமனையைத் தொடர்புகொண்டார். சைரன் பரபரக்க ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தை அடையும்போது, ‘ஸ்ட்ரோக் அவசர சிகிச்சைப் பிரிவினர்’ தகவலறிந்து ஆயத்தமாக இருந்தனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோ சோதனைகள் எல்லாம் மின்னல் வேகத்தில் எடுக்கப்பட்டு, அவருக்கு வந்திருக்கும் ‘ஸ்ட்ரோக் / பக்கவாத’த்தின் நிலைமை உறுதிசெய்யப்பட்டு, ‘டிஷூ பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர்’ (Tissue Plasminogen Activator) ஊசி போடப்பட்டது.
பெண்களைக் குறி வைக்கும் ‘பிரெயின் அட்டாக்’ – டாக்டர் வி. சதீஷ் குமார்
அடுத்த 10 நிமிடங்களில் அவரின் பேச்சு, இயல்பு நிலைக்குத் திரும்பியது, ஒரு மணி நேரத்தில் வலது கை செயல்பட ஆரம்பித்தது, 24 மணி நேரம் தீவிர சிகிச்சைக் கண்காணிப்புக்குப் பிறகு, இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். மருத்துவமனைக்குள் நுழைந்ததில் இருந்து நோயாளிக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்படும் நேரத்தை ‘டோர் டு நீடில் டைம்’ (Door to Needle Time) என்கிறோம். இந்நேரம் எந்தளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது. மேற்கண்ட கேஸில் 15 நிமிடங்களில் அந்தப் பெண்மணிக்கு ஊசி போடப்பட்டது. உண்மையில் அவர் அதிர்ஷ்டசாலிதான்!
ஒவ்வொரு நொடியும் மூளைச் செல்கள் இறக்கும் ஆபத்து!
மூளைக்குச் செல்கின்ற ரத்த நாளங்களில் ஏற்படும் தடை மற்றும் மூளைக்குள் ஏற்படும் ரத்தக்கட்டுதான் ஸ்ட்ரோக் / பக்கவாதத்தை உண்டாக்குகிறது. இதனால் மூளைச் செல்கள் பிராண வாயுவின்றி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு வருகிறோமோ அவ்வளவு சீக்கிரம் மீதியுள்ள மூளைச் செல்களைப் பாதுகாக்க முடியும், எனவேதான் பக்கவாதம் வந்தால் மிக அவசரமாக செயல்படுங்கள் என்று அறிவுறுத்துகிறோம். தண்ணீர் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை கொடுப்பது, பொது மருத்துவரை நாடுவது, முதலுதவி கொடுப்பது… இவற்றையெல்லாம் செய்து நேரத்தை வீணாக்காமல் நரம்பியல் மருத்துவ மையத்தை நாடுவதே சிறந்தது, காரணம் இது ஓர் எமர்ஜென்சி!
பெண்களைக் குறி வைக்கும் ‘பிரெயின் அட்டாக்’ – டாக்டர் வி. சதீஷ் குமார்
பெண்களை அதிகம் பாதிப்பது ஸ்ட்ரோக்தான், அதற்கு அடுத்துதான் மார்பகப் புற்றுநோய்! (Box News)
கொடிய நோயான மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே நல்ல விழிப்புணர்வு இன்று காணப்படுகிறது. ஆனால் அதைவிட 2 மடங்கு அதிகமாக பெண்களின் உயிரைப் பறிப்பது ஸ்ட்ரோக்! ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் ஹார்மோன்கள். பிரசவம், கருத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வோர், குழந்தை பெற்ற பின்னர் மற்றும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட/ஏற்பட்டால் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு. குறிப்பாக மூத்த தலைமுறையினர் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர்.
ஆறில் ஒரு ஆணுக்கும், அதேசமயம் ஐந்தில் ஒரு பெண்ணுக்கும் ஸ்ட்ரோக் ஏற்படுவதாக ‘உலக பக்கவாத அமைப்பு’ (World Stroke Organization) கூறுகிறது. இறப்பு சதவீதமும் ஆண்களில் 40%-ஆகவும் பெண்களில் 60%-ஆகவும் உள்ளது கவனிக்கத்தக்கது! அதனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் பெண்கள் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
ஸ்ட்ரோக் அறிகுறிகள்
ஒரு சலனமும் இல்லாமல் ‘திடீரென’, ஆம், திடீரென கீழ்க்கண்ட அறிகுறிகள் உடலில் தோன்றினால் அது ஸ்ட்ரோக் ஆகும்.
முகத்தில் உள்ள தசைகள் மரத்துப்போதல் / செயலிழத்தல்
ஒரு பக்க கை, கால், விரல்கள் – இவற்றிலொன்று அல்லது அனைத்தும் மரத்துப்போதல், வலுவிழத்தல் அல்லது செயலிழத்தல்
வாய் ஒருபக்கமாக இழுத்துக்கொள்ளல்
பேசுவதில் சிரமம் / வாய் குழறுதல்
ஒரு பக்க கண் பார்வை பாதிப்பு
சமநிலை தடுமாறுதல்
பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ளுவதில் சிரமம்
செய்யும் வேலையில் கவனம் செய்ய முடியாமை/ திடீர் குழப்பம்
பெண்களைக் குறி வைக்கும் ‘பிரெயின் அட்டாக்’ – டாக்டர் வி. சதீஷ் குமார்
‘மினி’ ஸ்ட்ரோக் – உடல் கொடுக்கும் முன்னெச்சரிக்கை
பெரும்பாலான கேஸ்களில் திடீரென்று ஸ்ட்ரோக் வருவதில்லை. மேற்கண்ட அறிகுறிகள் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை தோன்றி, பின் மறைந்துவிடக்கூடும். இதனை ‘மினி ஸ்ட்ரோக்’ அல்லது டிரான்ஸீயன்ட் இஸ்கீமிக் அட்டாக் (Transient Ischemic Attack – TIA) என்கிறோம். அறிகுறிகள் மறைந்தபின் பலரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சில மணி நேரம், நாட்கள், மாதங்கள் கழித்து அல்லது எதிர்காலத்தில் பிரெயின் அட்டாக் வர அதிக வாய்ப்புண்டு.
‘நான்கரை மணி நேரத்துக்குள்’… மறக்கவேண்டாம்!
உலகளவில், விபத்துகளைவிட ஸ்ட்ரோக்தான் கை கால் செயலிழப்புகளை அதிகம் ஏற்படுத்துகிறது. உயிரையே பறிக்கக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்ட அடுத்த நிமிடம், அனைத்து வசதிகளும் அடங்கிய ‘ஸ்ட்ரோக் யூனிட்’கொண்ட மருத்துவமனையை நாடுவதால் எந்தவித பாதிப்பும் இன்றி நோயாளியைக் காப்பாற்ற முடியும். மறக்கவேண்டாம்: அறிகுறிகள் ஏற்பட்டு முதல் 4 1/2 (நான்கரை) மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு விரைந்திடுங்கள்!
யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?: குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு இருக்குமாயின், குடும்பத்தினருக்கு வர வாய்ப்புண்டு. பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம், இருப்பினும் 40 வயதுக்கு மேற்பட்டோர், மினி ஸ்ட்ரோக் அறிகுறிகள் காணப்பட்டோர் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாகவே ஆசிய மக்கள் மற்றும் கறுப்பின அமெரிக்க மக்களிடையே இந்நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
80% ஆபத்தைத் தவிர்க்க முடியும்! : உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால், சர்க்கரை நோய், இதய நோய், உடற்பருமன், மன அழுத்தம், கரோட்டிட் மற்றும் பெரிபெரல் ஆர்ட்டரி பாதிப்பு (Carotid & Peripheral artery disease) – அதவாது கழுத்து மற்றும் கை, கால்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு… இவையெல்லாம்கூட பக்கவாதம் வரக் காரணங்கள் ஆகும்.
மேற்கண்ட காரணிகளைத் தடுக்க, வாழ்வியலை ஆரோக்கியமாக மாற்றுங்கள். புகையிலையை அனைத்து வகையிலும் தவிர்த்தல், மதுவைக் குறைத்தல், போதை வஸ்துக்களை அறவே தவிர்த்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், கொழுப்பு உணவுகளைக் குறைத்து காய்கறி & பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுதல், அதிக உப்பு மற்றும் சர்க்கரையைத் தவிர்த்தல், சரியான உடல் எடையைப் பராமரித்தல், இதையெல்லாம் செய்துவந்தாலே 80% ஸ்ட்ரோக் வராமல் தடுக்கலாம்!