2021 ஜனவரி 15-இன் படி, மகாராஷ்டிராவின் லத்தூர், பர்பானி, நாண்டெட், புனே, சோலாப்பூர், யவத்மல், அகமது நகர், பீட் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் புதிய பாதிப்புகள் 2021 கண்டறியப்பட்டன. மேலும், மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டம் (காகம்), குஜராத்தின் சூரத், நவஸ்ரீ மாவட்டங்கள் (காகம்), உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் (காகம்) மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டம் (காகம்) ஆகிய இடங்களில் பறவை காய்ச்சல் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தில்லியிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென்று பறவைகள் இறந்ததையடுத்து, அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும் துரித நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணை பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகள் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.
நன்றாக சமைக்கப்பட்ட பண்ணை இறைச்சி உணவுகளால் நோய் பரவாது என்றும், இது வரை பறவை காய்ச்சல் இல்லாத மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் பண்ணை பொருட்களின் விற்பனை மீது தடையேதும் விதிக்க வேண்டாமென்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், வதந்திகளை நம்ப வேண்டாமென்று பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.