இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரினை, சர்வதேச நாடுகளுக்கு கடத்தி வந்துள்ளனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்களில், போதைப்பொருள் இருப்பது அந்நாட்டு அதிகாரிகளால் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்துதான் அந்த பார்சல் வருகிறது என்பதை உறுதிப்படுத்திய அந்நாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான விசாரணையில், மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த பிப்ரவரி 15-ஆம்தேதி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
அப்பொது போதைப்பொருளை ஹெல்த்மிக்ஸ் உணவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து பேக்கிங் செய்து கொண்டிருந்த, சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். குடோனில் நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3,500 கிலோ போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜாபர் சாதிக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி, பல்வேறு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்திருப்பதாகவும் NCB கூறியது.
தொடர்ந்து, இவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள் பலருடன் தொடர்பிருப்பதாகவும், செல்வாக்கு மிகுந்த நபர்களுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும், அரசியல் ரீதியாக நிதிகளை வழங்கியிருப்பதாக NCB கூறியிருந்தது. மேலும், விரைவில் ஜாபர் சாதிக் மூலம் 7 லட்சம் ரூபாய் இரண்டு பரிவர்த்தனைகளாக அரசியல் கட்சி நிர்வாகி ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த அரசியல் கட்சி நிர்வாகியை அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்பப்படும் என NCB தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது பணமோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை ஜாபர் சாதிக் விவகாரத்தில் இறங்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி சினிமா துறையினருக்கு ஜாபர் சாதிக் மூலம் மிக பெரிய அளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், அது அனைத்தும் போதை பொருள் கடத்தல் மூலம் வந்த பணம் என்றும் கூறப்படுவதால்,
சினிமா துறையில் யார் யாருக்கெல்லாம் ஜாபர் சாதிக் மூலம் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது என்கிற தகவலை அமலாக்க துறை சேகரித்து வரும் நிலையில். இது தொடர்பான விசாரணைக்கு ஜாபர் சாதிக்யை சென்னைக்கு NCB அதிகாரிகள் அழைத்து வர இருப்பதாகவும், மேலும் விரைவில் இதில் சம்பந்தப்பட்ட சினிமா துறையினருக்கு NCB தரப்பில் இருந்து சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.