சிவகாசியில் உள்ள ஒரு முன்னணி பட்டாசு நிறுவனம் ரூ.22.5 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதையடுத்து பட்டாசு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சிவகாசியில் உள்ள முன்னணி பட்டாசு கம்பெனி, சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிவகாசி மற்றும் மதுரையில் அந்த பட்டாசு கம்பெனிக்கு சொந்தமான இடங்கள், கமிஷன் ஏஜென்டுகளின் அலுவலகங்களில், மதுரை மற்றும் கோவை மண்டல சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரக அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். இதில் பட்டாசுகளின் விலை மதிப்பு குறைத்து காட்டப்பட்டது, பணத்தை 3 ஆம் நபர்கள் மூலம் ரொக்கமாக வசூலித்தது போன்றவற்றுக்கான ஆதாரங்கள் சிக்கின.
கணக்கில் காட்டப்படாத ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில், பட்டாசு நிறுவனங்கள், விலைகளை குறைவாக குறிப்பிட்டும், முறையற்ற/செல்லாத ரசீதுகள் மூலம் பட்டாசுகளை விநியோகித்தது தெரிய வந்தது.. ஆனால் டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து வேறுபட்ட மதிப்பில் ரொக்க பணத்தை பெற்றுள்ளனர். மூன்றாம் நபர்கள்/ஏஜெண்டுகள் மூலம் டோக்கன் மற்றும் ஹவாலா முறையிலும் பணம் வசூலித்துள்ளனர்.
இவற்றை கணக்கு காட்டாமல், பட்டாசு நிறுவனம் சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 ஆம் ஆண்டு ஜூன் வரை இந்த பட்டாசு நிறுவனம் சுமார் ரூ.2.52 கோடி கலால் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது. 2017 ஜூலை முதல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் வரை இந்த பட்டாசு நிறுவனம் ரூ.20 கோடி அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்துள்ளது. இவை ஜாமீனில் வெளி வர முடியாத குற்றங்கள்.
பட்டாசு நிறுவனத்தின் அன்றாட கணக்கு வழக்குகளை கவனித்த முக்கிய பங்குதாரர், இதர பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள், விற்பனை பிரதிநிதிகள், கமிஷன் ஏஜென்டுகளுடன் இணைந்து இந்த முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.அவர் மதுரை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வரி ஏய்ப்புக்கு, அபராதத்துடன் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு தொடர்பாக நம்பகமான தகவல்களை யார் வேண்டுமானாலும் மதுரை, கோவை, திருச்சி, ஒசூர் ஆகிய இடங்களில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்கனரகத்துக்கு தெரிவிக்கலாம். அவர்களுக்கு தக்க வெகுமதி அளிக்கப்படும் என கோவை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரக கூடுதல் தலைமை இயக்குனர் கே. ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்