கொடுத்த கடனை திருப்பி தரவில்லை… தலைமை செயலகம் முன்பு முதியவர் தீக்குளிப்பு …

0
Follow on Google News

சென்னை : கடந்த ஒரு வருடத்துக்குள் தலைமை செயலகம் முன்பு இரண்டு தற்கொலை முயற்சி முதல்வர் வீட்டருகே ஒருவர் தீக்குளிப்பு முயற்சி மற்றும் சில மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்ச்சி என பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்றுவருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த முதியவர் ஒருவர் சென்னை தலைமையகத்தில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தலைமையகத்தில் முதலமைச்சர் அறை, தனிப்பிரிவு, அமைச்சர்கள் அலுவலகம் மற்றும் தலைமைச்செயலர் அலுவலகம் என பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

எப்போதுமே பகலில் பிசியாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அலுவலக வளாகத்திற்குள் திடீரென புகுந்த முதியவர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதைக்கண்ட பலர் அலறியடித்து சிதறி ஓடினர். அதைக்கண்டு சுதாரித்த காவல்துறையினர் எரிந்துகொண்டிருந்த முதியவர் மீது மணல் மற்றும் நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் முதியவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் அவர் கையிலிருந்த கோரிக்கை மனுவை கைப்பற்றிய போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த கோரிக்கை மனுவில் திருவாலங்காட்டில் வசிக்கும் பொன்னுசாமி என்பவர் போரூரை அடுத்து அமைந்துள்ள மவுலிவாக்கத்தில் வசிக்கும் தனது நண்பரான சுப்பிரமணிக்கு 14 லட்சம் கடன் கொடுத்ததாகவும் அதை திருப்பி தரமறுத்தபோது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் பத்தாண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்காததாலும் தான் தீக்குளிக்க முயன்றதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமைச்செயலக வளாகத்திலேயே இந்த தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.