சென்னை : தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களின் பின்னணியில் பெரும்பாலும் அடுத்த மாநிலத்தவரே ஈடுபட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக வீடு வேலைக்கு தமிழரை தவிர்த்து மற்ற மாநிலத்தவரை பணியில் அமர்த்துவது மிகவும் ஆபத்தான செயல் என இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
சென்னை மயிலாப்பூர் துவாரகா மஹாலட்சுமி தெருவில் வசித்து வருபவர்கள் வயதான தம்பதிகளான ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா. ஸ்ரீகாந்த் ஒரு ஆடிட்டர்(66). ஸ்ரீகாந்துக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான நிலங்கள் உண்டு. இந்த தம்பதியினரின் மகள் சுனந்தா. இவர் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மகளின் பிரசவத்திற்காக தம்பதிகள் அமெரிக்கா சென்றிருந்தனர். நேற்று முன்தினம் 7ம் தேதி துபாய் வழியாக சென்னை வந்தடைந்தனர். இவர்களை வீட்டிற்கு அழைத்துச்செல்ல கார் ட்ரைவர் கிருஷ்ணன் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் வீடு சென்றடையவில்லை.
இந்நிலையில் மகள் சுனந்தா தனது பெற்றோர்களிடம் பேச செல்போனை தொடர்புகொண்டிருக்கிறார். அவர்களது போன் தொடர்ச்சியாக சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் சந்தேகமடைந்த சுனந்தா தனது உறவினர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அடையாறில் உள்ள அந்த உறவினர் மயிலாப்பூர் விரைந்தனர். வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியான அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு தம்பதிகள் இல்லை. வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சுனந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் புகாரளித்தனர். மேலும் கார் ஓட்டுநர் கிருஷ்ணா நேபாளத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணையில் இறங்கிய துணை ஆணையர் திஷா மிட்டல் உதவி ஆணையர் கவுதமன் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர்.
விமான நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில் கார் ஓட்டுநர் கிருஷ்ணா வயதான தமபதியினரை அழைத்துச்சென்றது பதிவாகியிருந்தது. டிரைவரின் செல்போன் எண்ணை வைத்து பின்தொடர்ந்ததில் ஆந்திரா மாநிலம் ஓங்கோலுக்கு செல்வது தெரியவந்தது. அங்கு அமைந்துள்ள சோதனை சாவடியில் கிருஷ்ணனை மடக்கினர் காவல்துறையினர்.
அவனுடன் இருந்த ரவி என்பவனையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பத்து ஆண்டுகளாக கிருஷ்ணா டிரைவராக வேலைபார்த்தது தெரியவந்தது. மேலும் தம்பதிகளை மயிலாப்பூர் வீட்டில் வைத்து கொலைசெய்து விட்டு இ.சி.ஆர் சாலையில் உள்ள தம்பதிகளுக்கு சொந்தமான சூலேரிகாட்டிலேயே சடலங்களை புதைத்துள்ளனர். ஒருகோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடமிருந்து எட்டு கிலோ தங்கம் , 50 கிலோ வெள்ளி பொருட்கள் 10 வைர மூக்குத்திகள் பிளாட்டினம் வளையல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட தம்பதிகளின் சடலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.