குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட முத்து மனோ அடுத்த சில மணி நேரங்களில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது திருநெல்வேவி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததற்காகக் கைது செய்யப்பட்ட முத்துமனோ என்ற 27 வயது இளைஞர் திருவைகுண்டம் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
கடந்த 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட முத்து மனோ அடுத்த சில மணி நேரங்களில் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் அதிகாரிகள், காவலர்கள் என பெரும் படையே இருந்தும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்பட்ட கொலை என முத்து மனோ உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முத்து மனோ கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் 22-ஆம் தேதி வரை 15 நாட்கள் திருவைகுண்டம் கிளைச்சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்பு திருவைகுண்டம் சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, 22-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அடுத்த இரு மணி நேரத்தில் அவர் சிறையில் இருந்த இன்னொரு கும்பலால் பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார், அவர் தெரிவித்துள்ளதாவது முத்து மனோ படுகொலைக்கு சாதிய பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. முத்து மனோவின் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரம் என்ற கைதி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி இதே சாதிய பின்னணி காரணமாக, தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, காவல் வாகனத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த படுகொலைகளை காவல்துறையினரும், சிறைத்துறையினரும் கண்டும், காணாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றால் அது மிகவும் பயங்கரமானது. எதிர்காலத்தில் தென் மாவட்டங்களின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விடும் அளவுக்கு ஆபத்தானது. அதைத் தடுக்க இத்தகைய கொலைகள் இனியும் நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.