தெய்வத்திருமகனார் தேரின் குருபூஜை நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பசும்பொன் தேவர் குறித்து பலர் அறியாத வரலாற்று சம்பவங்கள் பற்றி அவர் தெரிவித்ததாவது, மத நல்லிணக்கத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போற்றி வளர்த்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 114-ஆவது பிறந்தநாளும், 59-ஆவது குருபூஜையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் அவரது பங்கு ஈடு இணையற்றது. காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தேவர் பெருமகனார், பின்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் உரைகளைக் கேட்டு அவருக்கு நெருக்கமானவராக மாறினார். நேதாஜியும் தேவரை தமது இளைய சகோதரராகவே பார்த்தார். ஆங்கிலேயர்களை வீழ்த்துவதற்காக நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தேசப்பற்றாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.
முத்துராமலிங்கத் தேவர் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போதே அவரது தாயார் இறந்து விட்டதால் ஆயிஷா பேபி என்ற இஸ்லாமியப் பெண்ணிடம் தான் தாய்ப்பால் குடித்து வளர்ந்தார். சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்த குழந்தை சாமி என்பவர் தான் அவருக்கு கல்வி கற்பித்தவர். அதனால் அனைத்து சமூகத்தினருடனும், அனைத்து மதத்தினருடனும் நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது, பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பு மற்றும் மதுரை டிவிஎஸ் நிறுவன தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்து உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என பொதுவாழ்க்கையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்.
அரசியலிலும் அவர் பதித்த முத்திரைகள் எண்ணற்றவை. 1937-ஆம் ஆண்டு தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மன்னர் சேதுபதியை வீழ்த்தி வெற்றி பெற்றது, நேதாஜியுடன் இணைந்து பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியது, காமராசருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை உருவாக்கித் தந்தது, 1952-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தலில் சட்டமன்றம், நாடளுமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது என அவர் கடந்த அரசியல் மைல்கற்கள் ஏராளம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது தான் தேவரின் நோக்கம். அதற்காகவே அவர் பாடுபட்டார். அவர் இன்னும் கூடுதல் காலம் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், தமது 55-ஆவது பிறந்தநாளில் நம்மை விட்டு மறைந்தார். மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு காரணமாக உள்ளன. தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.