தருமபுரி : தங்குவதற்கு வீடு ஒதுக்காமல் கட்டாயப்படுத்தி மக்களை வெளியேற்றி வீடுகளை அதிகாரிகள் இடித்துத்தள்ளியதால் பொருட்களுடன் மக்கள் நடுத்தெருவில் கண்ணீரும் கம்பலையுமாக தனகது உடமைகளுடன் நிற்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அமைந்துள்ள கிராமமான பல்லேனஹள்ளியில் அரசு ஆலம்பாடி நாட்டு மாடு ஆராய்ச்சிமையம் செயல்பட்டு வருகின்றது.இந்த மய்யத்தை ஒட்டி அமைந்துள்ள 96 ஏக்கர் அளவுள்ள மேய்ச்சல் நிலத்தை மேம்படுத்தி காலனடைகளுக்கு தேவைப்படும் உணவு மற்றும் மேய்ச்சலுக்காக பயன்படுத்த அரசு முடிவெடுத்தது.
அதனால் அங்கு வசிக்கும் பலநூறு குடும்பங்களுக்கு மாற்று இடம் கூட தயார் செய்துகொடுக்காமல் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவந்த அவர்களை வலுக்கட்டாயமாக விரட்டியுள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள். மேலும் அவர்களது இல்லங்களை இடித்து தரைமட்டமாகியுள்ளனர்.
இதனால் தாங்கள் வளர்த்த வளர்ப்புநாய், ஆடுகள் கோழிகள் மாடுகள் தங்களது உடமைகள் என அனைத்தோடும் நடுத்தெருவில் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கின்றனர் பொதுமக்கள். இதில் பலர் அன்றாட வாழ்விற்காக தினக்கூலி வேலைக்கு போகும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடிக்கப்பட்ட வீடுகளில் பல 1.70 லட்சம் செலவில் பிரதமர் மோடியின் இலவச வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரசுத்துறைகளும் சேர்ந்து எங்களுக்கு கிணறு பட்டா மின்சாரம் என எல்லாவற்றையும் வழங்கிவிட்டு திடீரென இப்படி வீட்டை தரைமட்டமாக்கி எங்களை அரசு தவிக்கவிட்டுவிட்டதே என பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் கண்ணீர்மல்க கூறிவருகின்றனர்.