நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை ஒட்டியமைந்துள்ள கருவேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோகிலா. இவருக்கு வயது 40. கணவனை இழந்த இவர் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நாமக்கல்லை பதட்டத்திற்குள்ளாகியிருக்கிறது.
கோகிலாவின் மகளான ஆர்த்தி அதேபகுதியில் லாரி பாடிகட்டும் ஓர்க்ஸ்சாப்பில் பணிபுரிந்துவரும் கார்த்தி என்பவருடன் மூன்று வருடங்களாக காதலில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறவேண்டும் என்ற ஆசையில் கோகிலாவிடம் சென்று முறையாக பணம் கேட்டிருக்கிறார் கார்த்தி . அதன்பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்த்திக்கும் கார்த்திக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்தையடுத்து புதுமணத்தம்பதிகள் இருவரும் மாங்குட்டை பாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர். ஆனால் துரதிர்ஷ்டாவசமாக திருமணமான ஒரே வாரத்தில் கார்த்திக்கு உடல்நிலை மோசமானது. இதைக்கண்டு பயந்த ஆர்த்தி தனது அம்மாவான கோகிலாவின் வீட்டிற்கே சென்றுவிட்டார். உடலும் சரியில்லை மணவாழ்க்கையும் சரியில்லை என்பதால் கடும் விரக்தியில் கார்த்தி இருந்துவந்துள்ளார்.
ஒருமாதம் தள்ளி மாமியார் வீட்டருகேயே குடிபோகலாம் என்று நினைத்த கார்த்தி மாமியார் வீட்டின் அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். தனது காதல் மனைவியை குடும்பம் நடத்த அழைத்த கார்த்தியிடம் வரமுடியாது என கூறியுள்ளார் ஆர்த்தி. மேலும் ஆர்த்தியை அனுப்ப கோகிலா விரும்பவில்லை என கூறப்படுகிறது.
பல நாள் கழித்தே இந்த விஷயம் கார்த்தியின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி மாமியார் கோகிலாவிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார். கோகிலா கறாராக மறுத்துவிடவே சோகத்தில் திரும்பியுள்ளார். தனது திருமண உறவிற்கு மாமியாரே தடையாக இருப்பதையெண்ணி நொந்துபோனார் கார்த்தி.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் கோகிலாவிடம் சென்ற கார்த்தி ஆர்த்தியை அனுப்பிவைக்குமாறு பரிதாபமாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் அழுதுள்ளார். அதிலும் மனமிறங்காத மாமியாரின் மீது கார்த்திக்கு கோபம் வந்துள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் கோகிலா தலையில் அருகிலிருந்த அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார் கார்த்தி.
இதில் நிலைகுலைந்த கோகிலா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்செங்கோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கார்த்தியை கைதுசெய்தனர். தம்பதிகளின் உறவுக்கு தடையாக இருந்த மாமியாரை சம்பவம் செய்தது நாமக்கல் பகுதியை பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.