சென்னை : தமிழகத்தில் நாளுக்குநாள் குற்றங்கள் பெருகி சமூக அமைதி குலைந்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைக்கும்வேளையில் தலைநகரில் பட்டப்பகலில் நடந்த படுகொலை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
திமுக தலைவர்களுள் ஒருவரான உதயநிதி ஸ்டாலினின் சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்தார். இவரது அலுவலகம் சென்னையிலுள்ள ஷெனாய் நகரில் அமைந்துள்ளது.
இவர் எப்போதும் தனது இருசக்கரவாகனத்திலேயே ஷெனாய் நகர் அலுவலகத்திற்கு செல்வார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல தனது இருசக்கரவாகனத்தில் ஆறுமுகம் சென்று கொண்டிருந்தார். ஆறுமுகம் புல்லா அவென்யூ அருகே ஆறுமுகம் சென்றுகொண்டிருக்கையில் அவரை இருசக்கரவாகனத்தில் பின்தொடர்ந்துவந்த ஆறுபேர் அவரை வழிமறித்தனர்.
பின்னர் ஆறுமுகத்துடன் வாய்தகராறில் ஈடுபட்டனர். தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை தாக்க தொடங்கினர். இதைக்கண்டு திகைத்த ஆறுமுகம் தப்பித்து ஓட ஆரம்பித்தார். அவரை விடாமல் விரட்டிச்சென்ற அந்த ஆறுபேரும் சாலை மத்தியில் இருந்த தடுப்பின் அருகே அவரை சுற்றிவளைத்தனர்.
பின்னர் அவரை சராமாரியாக வெட்டிவீசினர். பின்னர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பினர். இதனால் ரத்தவெள்ளத்தில் சரிந்த ஆறுமுகம் உயிருக்குபோராடிய நிலையில் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.