சென்னை : தமிழகத்தில் கடந்த சிலமாதங்களாக விசாரணைக்கைதிகள் தொடர்ந்து மரணம் அடைந்து வருவது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று விசாரணைக்கைதிகள் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 18 அன்று சென்னை பகுதியில் ஆட்டோவில் வந்துகொண்டிருந்த விக்னேஷ் மற்றும் நண்பரான சுரேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அதில் விக்னேஷ் காவல்நிலைய விசாரணையின்போதே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குடும்பபத்தினரும் மிரட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
இதுநடந்த சில நாட்களிலேயே திருவண்ணாமலை மாவட்டம் தட்டாரணை கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ஏப்ரல் 26 அன்று காலை 9 மணியளவில் கைதுசெய்யப்பட்டார், அவரை திருவண்ணாமலை கலால் துறை அதிகாரிகள் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றதாக தெரிகிறது.
27 ம் தேதி சிறையிலடைக்கப்பட்ட தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு இறந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தங்கமணி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மீண்டும் ஒரு விசாரணைக்கைதி மரணமடைந்துள்ளார். சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்.
ராஜசேகர் என்ற அப்பு மீது பல்வேறுவலாக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கொடுங்கையூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு வழக்கில் ஜூன் 11 அன்று திருவள்ளூரில் ராஜசேகர் என்ற அப்புவை கொடுங்கையூர் போலீசார் கைதுசெய்தனர். நேற்று மதியம் போலிஸ்டேஷனில் அப்பு திடீரென மயங்கிவிழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து போலீசார் சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு அப்புவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ந்து விசாரணைக்கைதிகள் மரணமடைந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை உண்டுபண்ணியுள்ளது.