அலங்கார தூண் சரிந்து விழுந்து தெப்பத்திருவிழாவில் நேர்ந்த விபரீதம்..! திருவாரூரில் நடந்த சோகம்..

0
Follow on Google News

திருவாரூர் : திருவாரூர் ஆழித்தேர் உலகப்பிரசித்தி பெற்றது. அதேபோல திருவாரூர் கோவிலில் அமைந்துள்ள கமலாலய குளமும் பக்தர்களுக்கு பரவசத்தை கொடுக்கிறது. இந்த குளம் மிக அகன்றது மற்றும் ஆழமானது ஆகும். இந்த கோவில் தாமரைக்குளத்தின் தெப்பத்திருவிழா கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தெப்பத்திருவிழா கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் திருவாரூர் ஆழித்தேரோட்டம் கடந்த மார்ச் 15 அன்று மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதையடுத்து கமலாலய தெப்பத்திருவிழா நடத்துவது மரபு. இந்நிலையில் மே 20 முதல் 22 மே வரையிலான மூன்று நாட்கள் தெப்போற்சவ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் யாரும் எதிர்ப்பாராவண்ணம் துயர சம்பவம் நடைபெற்றது.

தெப்போற்சவ திருவிழாவின் முதல்நாள் சிறப்பாக நடந்துமுடிந்த நிலையில் இரண்டாம் நாள் கமலாலய குளத்தின் தென்கரையில் தென்மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் 15 அடிக்கும் மேலான அலங்காரத்தூண் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது திடீரென சரிந்து விழுந்தது. அருகிலிருந்த தெப்பத்தில் விழவில்லையாதலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே 22 மே ஞாயிறு வடமாநிலமான ராஜஸ்தானில் இருந்து பலூன் உள்ளிட்ட பொருட்களை விற்க ஒரு குடும்பம் திருவாரூர் வந்திருந்தது. அதில் முஸ்கான் எனும் சிறுமி கமலாலய குளத்தில் குளிக்க முயன்றபோது தவறுதலாக உள்ளே விழுந்து மூழ்கினார். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் குளத்தில் சிறுமியை தேடினர். வெகுநேரம் கழித்து முஸ்கான் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேபோல அதே நேரத்தில் புலிவலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேசன் தெப்பக்குளத்தில் நீந்தி நடுவண் குளத்துக்கு செல்ல முயன்றபோது மூச்சுத்திணறி உயிரிழந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் புனிதஸ்தலங்களில் அடுத்தடுத்து நிகழும் துர்மரணங்கள் மக்களை பீதியடையச்செய்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தேர் ஒன்று தீப்பற்றியெரிந்தது குறிப்பிடத்தக்கது.