சென்னை : ஏற்காடு பகுதியில் மாநில அளவிலான ஒரு பயிற்சி நிறுவனத்தை நிறுவ கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை திமுக அரசு மாற்றியமைக்க கடந்த வருடம் அரசாணை பிறப்பித்தது. திமுகவின் இந்த அரசாணையை எதிர்த்து சென்ட்ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த ரிட் மனுக்களின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தமிழக அரசுகளை கடுமையாக விமர்சித்தார். நீதிபதி குறிப்பிடுகையில் ” தமிழகத்தில் பல தசாப்தங்களாக அடுத்தடுத்து வந்த அரசுகள் சில திட்டங்களில் மட்டும் ஒரேமாதிரியான கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன.
அரசுகளின் சில முடிவுகள் மக்களின் நலனுக்கும் ஒட்டுமொத்த சமூக நலனுக்கு கேடு விளைவிப்பதாய் இருந்தாலும் கூட அரசின் கருவூலத்தின் வருவாயில் கண்ணும் கருத்துமாக உள்ளன. இதற்கான கொள்கைகளை ஒருபோதும் எந்த அரசும் கைவிடவில்லை. அரசுகள் ரத்து செய்வதை குறித்து பேசவேண்டுமெனில் பல நலத்திட்டங்கள் அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால் மதுவிலக்கு கொள்கைகளை மட்டும் கடந்த ஐந்து தசாப்தங்களாக எந்த அரசும் விட்டுக்கொடுக்காமல் சீராக தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றன. டாஸ்மாக் மதுபானங்களை மக்களுக்கு வசதியான இடத்திலும் வசதியான முறையிலும் எளிதாக கிடைக்க செய்துள்ளது. கடந்த 2011ல் திமுக அரசு 1100 கோடி செலவில் ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது.
ஆனால் அடுத்துவந்த அதிமுக அரசு அந்த திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அதே கட்டிடத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை எழுப்பியது. இதுபோன்ற கொள்கை முடிவுகள் மக்களின் நலனுக்கு கேடுவிளைவிப்பதாக இருந்தாலும்கூட நீதித்துறை மாரு ஆய்வுமூலம் கேள்வியெழுப்ப முடியாது. மனுதாரர் அளித்துள்ள மனுவில் நம்பத்தகுந்த காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
முந்தைய அரசின் திட்டங்களை கொள்கை ரீதியாக தற்போதைய அரசு மாற்றியமைப்பதை நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது. மனுதாரரின் இரண்டு ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.