சென்னையில் 400க்கு மேற்பட்ட ஏரிகளை காணவில்லை… நீர்நிலையத்தை ஆக்கிரமித்து கொண்டு தண்ணீர் புகுந்து விட்டது என கதறுவது என்ன நியாயம் மக்களே.?

0
Follow on Google News

நுங்கம்பாக்கம் ஏரியை அழித்து வள்ளுவர்கோட்டம் மற்றும் நுங்கம்பாக்கத்தின் உள்ள சில தனியார் கம்பெனிகள், அல்லிக் குளம் ஏரி மீது மிக பிரமாண்டமான நேரு ஸ்டேடியம், வேளச்சேரி ஏரி மீது 100 அடி சாலை, ரானே கம்பெனி, மற்றும் ஃபீனிக்ஸ் மால், கோயம்பேடு சுழல் ஏரி மீது கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம், விருகம்பாக்கம் ஏரி மீது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு, இப்படி சென்னை நகரில் இருந்த பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாதின் விளைவு ஒவ்வொரு மழைக்கு தத்தளிக்கிறது.

கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன.கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் பெரும்பான்மையான நீர்நிலைகளை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1980ம் ஆண்டு இருந்த வேளச்சேரி ஏரியின் 1996ம் ஆண்டுகுள் முக்கால்வாசி குடியிருப்புகளாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், சிறிய மழைக்கே சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது.

கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. மத்திய சென்னையின் பெரும்பகுதியாய் இருந்த ஒரு ஏரியை காணோம். இப்படி பல ஏரிகளை தொலைத்து நிற்கிறது சென்னை. அடுத்த சிங்கப்பூர், அடுத்த ஆஸ்திரேலியா என தொலைநோக்கு பார்வையில்லாமம் ஏரி, குளம், குட்டை என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து உருவான நாகரிக சென்னை.

தொலைநோக்கு பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் மக்களும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க, இன்று தன்னுடைய அங்கங்களை இழந்த சென்னை, மழை நீரை எங்கு சேமிப்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது. வந்தாரை வாழவைத்த சென்னை வந்தவர்களுக்கு இடம் கொடுத்த மக்கள் ஒவ்வொரு மழைக்கு எங்கே செல்வது என தெரியாமல் உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள்.

மும்பையின் வளர்ச்சியில் அதன் நீர்நிலைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. மும்பை பெருநகரத்துக்கு நடுவிலேயே இன்னமும் மூன்று பெரிய ஏரிகள் இருக்கின்றன. இதற்கு காரணம் மும்பையின் வளர்ச்சியில் எந்த ஒரு நீர்நிலையும் பாதிக்கப்படவில்லை, இதனால் எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்கிறது மும்பை, ஆனால் கிராமங்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட சென்னையில் இருந்த பல ஏரிகள் காணாமல் போய்விட்டன.

இன்னும் எஞ்சியிருப்பவை போரூர் ஏரி, ஆலந்தூர் ஏரி, வேளச்சேரி ஏரி, விருகம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி ஆகியவைதான். இந்நிலையில் ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி கொண்டு அய்யோ எங்கள் குடியிருப்புகள் தண்ணீர் புகுந்து விட்டது என்று மக்கள் கதறுவதில் என்ன நியாயம்.?