தமிழ்நாட்டின் தீவு நகரமான ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதி தனுஷ்கோடி.. பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த கடல் பகுதியாகும். இது வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடமாக இருக்கிறது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பயனாக இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்கு எளிதாக செல்ல ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட நகரம் தான் தனுஷ்கோடி. அந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்திற்காக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24 ஆம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.
தொடர்ந்து தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரே பயணசீட்டில் வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு கொண்டுசென்று பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று தலைமன்னாரில் இருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்றனர்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் பயணிகள், இருபுறமும் நீலவண்ணத்தில் கடலும் இதமான காற்றும், தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இது எல்லாம் தனுஷ்கோடி பழைய கதை. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு, அதாவது 24-ம் தேதி அதிகாலை கோரப்புயல் தனுஷ்கோடியைத் தாக்கியது. இதெல்லாம் நடந்து 60 ஆண்டுகள் ஆகின்றன.
அந்தக் கோரப்புயலின் தாக்கத்திலிருந்து இன்றுவரை தனுஷ்கோடி மீளவே இல்லை. அன்று வீசிய புயலில் இந்தியாவின் தேசப்படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று. புயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடம் மாறினர். புயலுக்கு முன்னர் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரயில் புறப்பட்டுச் சென்றது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே ரயில் வழியிலே நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்கள் மட்டுமே. மற்றவை அனைத்தையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அதில் 1000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 40க்கும் மேற்பட்டோர் குஜராத்திலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள். அவர்கள் அனைவரும் புயலுக்கு இரையாயினர். தனுஷ்கோடியிலிருந்த பெரிய பெரிய கட்டடங்கள், ஒரு பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாயின.
அப்போது தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டதால் வெளி உலகத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் சேதாரத்தின் விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை. பின்னர் அவர்களைக் காப்பாற்றக் கப்பல்கள், மோட்டார் படகுகள், ஹெலிகாப்டர், விமானங்கள் ராமேஸ்வரம் நோக்கி விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானத்திலிருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன.
புயலில் தப்பியவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் மருத்துவர்கள் ராமேஸ்வரத்துக்கு அனுப்பப்பட்டனர். இடிபாடுகளில் இன்றும் எஞ்சியிருப்பது தேவாலயம், விநாயகர் கோயில், அஞ்சலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட சில கட்டடங்கள் மட்டும்தான். இந்த அடையாளச் சின்னங்கள் வருடங்கள் செல்லச் செல்ல மேலும் சிதிலமடைந்து வருகின்றன. 1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்தது. மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக இதனை அறிவித்தது அரசு.
இருபது வருடங்களுக்குப் பிறகு அகதிகள் வருகை, பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு என பதற்றமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது. புயலின் அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில்தான் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிதைந்த கட்டடங்களையும், அடிப்படை வசதியின்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தையும் மனதில் சுமந்து கொண்டுதான் செல்கின்றனர்.