தொழிலதிபர் கடத்தல்.. இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி வலையில் சிக்கியது எப்படி.?

0
Follow on Google News

சென்னை : சென்னை அண்ணாநகரை அடுத்துள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் கடந்த ஏழுமாத காலங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணன் அதிரடியாக நேற்று சிபிசிஐடி போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை திருமங்கலம் அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தொழிலதிபரும் கூட. இவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் பண்ணைவீடுகள் என சொத்துக்கள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜேஷை அவரது பண்ணைவீட்டிலேயே கட்டிப்போட்டு அவரது சொத்துக்களை திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் மிரட்டி எழுதிவாங்கியதாக புகார் எழுந்தது.

அதைத்தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திருமங்கலம் அசிஸ்டண்ட் கமிஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த பத்து காவலர்கள் மீது சிபிசிஐடி வழக்கு பதிந்தது.

வழக்கு பதியப்பட்ட தகவல் வெளியானதும் பத்துபேரும் தலைமறைவாகிவிட்டனர். அதைத்தொடர்ந்து ஆறு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த சரவணன் கைதுசெய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த ஆட்கடத்தல் வழக்கில் தொடர்புடைய அசிஸ்டன்ட் கமிஷனர் சிவகுமார், முன்னாள் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆகிய மூன்றுபேர் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை பிடிக்க சிபிசிஐடி தீவிர தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.