லாட்டரியால் கடனாளியாக தொழில் அதிபர்… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்..

0
Follow on Google News

ஈரோடு : ஈரோட்டில் தூக்கில் தொங்கிய ஒரு கமிஷன் ஏஜென்ட் தனது மரண வாக்கு மூலத்தில் திமுகவின் பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீது பரபரப்பான குற்றசாட்டு வீடியோ ஒன்றை வாட்சப்பில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள முல்லைநகரில் குடும்பத்துடன் வசித்துவந்தவர் ராதாகிருஷ்ணன். வயது 54. இவரது மனைவி மாலதி வயது 52 மற்றும் அவரது மகள்கள் திவ்யாபாரதி மற்றும் நித்யா ஆனந்தி. மிக மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் திமுக கவுன்சிலர் ரூபத்தில் விதி விளையாடியதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் திடீரென அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு காரணம் தெரியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் குழம்பி வந்தனர். அவரது தற்கொலை மிக மர்மமாகவே இருந்தது. இரங்கல் வீட்டில் கூடிய உறவினர்கள் தற்கொலை செய்துகொண்ட ராதாகிருஷ்ணனின் மொபைலை எடுத்து ஆய்வுசெய்தனர்.

அந்த செல்போனில் ராதாகிருஷ்ணன் பதிவிட்ட வீடியோ ஒன்று இருந்தது. அந்த வீடியோவில் கருங்கல்பாளையம் பகுதி திமுக கவுன்சிலர் கீதாஞ்சலி என்பவரின் கணவர் செந்தில்குமாரிடம் லாட்டரியில் 62 லட்சம்வரை தான் இழந்துவிட்டதாக மற்றும் தான் உயிரோடு இருந்தால் அவருக்கு அடிமையாக வாழவேண்டும் என்பதால் பயத்தில் தற்கொலை செய்வதாகவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் திகைத்துப்போயினர். உடனடியாக ஈரோடு வடக்கு காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பட்டறை தொழில் நடத்திவந்த ராதாகிருஷ்ணன் தொழில் நஷ்டமானதால் லாட்டரி மூலம் சம்பாதிக்க ஆசைப்பட்டு செந்தில்குமாரிடம் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஜூன் முதல் ஏப்ரல் வரை தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை நேரிடையாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்றதாக 215 பேர் கைதுசெய்யப்பட்டு 147 வழக்குகள் ஏழு மாவட்டத்தில் மட்டும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.