சென்னை : நாளுக்குநாள் தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் மாநில சட்டம்ஒழுங்கு கேள்விக்குரியதாகிவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டிய தலைநகரான சென்னையே கொலைகளின் கோட்டையாக மாறிவிட்டதாக சென்னைவாசிகள் புலம்பிவருகின்றனர்.
சென்னை ஆயிரம்விளக்கு சுதந்திரா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மொக்க என அழைக்கப்படும் மோகன். இவர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது. புதுப்பேட்டை புறா என்பவருக்கும் மொக்கைக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மொக்க மற்றும் அவனது கூட்டாளிகள் புதுப்பேட்டை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடுதிரும்பினர். மொக்க என்ற மோகன் வீடு திருப்பியதும் வரையும் அவரது நண்பர் ஷாம் என்பவரையும் யாரோ தேடிவந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் நம்ம யார் தேடி வந்தார்கள் என்ற ஆர்வத்தில் அவர்களை தேடி கிளம்பினார் மோகன்.
அவருடன் கூட்டாளிகளான சந்தோஷ், அருணாச்சலம், சுனில், மனோஜ் உள்ளிட்டோர் நடு இரவில் புதுப்பேட்டை பகுதிக்கு மீண்டும் சென்றனர். அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற அவர்கள் அங்கிருந்த ஒரு கும்பலிடம் யாரு எங்களை தேடிவந்தது. முடிந்தால் இப்போது வாருங்கள் என சவால் விட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களால் மோகனை தாக்க தொடங்கியது.
மோகனுடன் வீரமாக வந்த கூட்டாளிகள் ஆளுக்கொரு திசையில் பறந்தனர். மோகன் தப்பிக்க நினைத்து புதுப்பேட்டை அய்யாசாமி தெருவில் உயிர்பிழைக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் சுற்றிவளைத்து சராமரியாக வெட்டியது. அதனால் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மொக்க உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த மோகன் மீது கொலைமிரட்டல் அடிதடி உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. யார் பெரியவன் என்ற தகராறில் புதுப்பேட்டை புறா மோகனை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய விக்ரம், வெங்கடேசன், மோசஸ், அருண் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.