இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறைச்சி உண்ண பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் சமூகவலைதளங்களில் நேற்று பரவியது. நேற்று முதல் இணையத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களை மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உண்ண தடை விதித்ததாக செய்திகள் பரவின. இதனால் இந்திய மக்கள் இடையே பிசிசிஐக்கு கண்டனங்கள் எழுந்தன.
மேலும் சாப்பிடும் இறைச்சியும் ஹலால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகததால் வாய்வழி உத்தரவாக வீரர்களுக்கு சொல்லப்பட்டதாக தகவல்கள் கூறின.
அடுத்தடுத்து வரும் முக்கிய தொடர்களில் வீரர்கள் தேவையற்ற எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ இந்த கடுமையான உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் வீரர்களுக்கு எந்தவிதமான உணவுத்தடையும் விதிக்கப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இது சம்மந்தமாக ‘வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. வீரர்கள் உணவு சம்மந்தமாக எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆகவே இதெல்லாம் அமலுக்கு வராது. வீரர்கள் தங்கள் விருப்பப்படி சைவ உணவோ அல்லது அசைவ உணவோ சாப்பிட பிசிசிஐ எப்போதும் தடை விதித்ததில்லை. உணவுமுறை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது’ எனக் கூறியுள்ளார்.