இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி வரலாற்றை சகாப்தத்தை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மகேந்திர சிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தோனி கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தோனி உருவாக்க முக்கிய காரணம் அவரது சிக்ஸர்தான்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலகட்டங்களில் அவர் அடித்த சிக்ஸர்களை ஹெலிஹாப்டர் சிக்ஸர் என அழைக்கப்பட்டது. தோனியின் சிக்ஸர் அடிக்கும் திறன் மட்டும் இல்லாமல் தோனியின் ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பே இருந்தது. இந்த சிக்ஸர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல எடுக்கப்பட்ட ரன்னை தோனி சிக்ஸர் விளாசிதான் கோப்பையில் இந்தியாவின் பெயரை பொறிக்க வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இது தோனியின் கடைசி சீசன், கடைசி சீசன் என ஊடகங்களிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த தோனி, சென்னை அணி ரசிகர்களுக்காக தான் சென்னையில் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்காகவே கடந்த சீசன் விளையாடினார். கடந்த சீசனில் தோனி தலைமையில் சென்னை அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர் தோனி தனது முகநூல் பக்கத்தில், ”என்னால் காத்திருக்க முடியவில்லை. வரக்கூடிய புதிய சீசனில் புதிய அத்தியாத்தை தொடங்குகின்றேன். காத்திருங்கள்” என பொருள் படும்படி பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு தோனி மறைமுகமாக தெரிவிக்கும் ஓய்வு குறித்த அறிவிப்பு என கூறப்பட்டது. இந்நிலையில் தோனிக்கு பதிலாக இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன்சியில் இருந்து தோனி விலகுவதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உணர்ச்சி பொங்க கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 10 முறை இறுதிப்போட்டி வரை அணியை அழைத்து சென்றுள்ளார். அத்துடன் மிக முக்கிய இதுவரை 16 சீசன்கள் நடந்த ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் மட்டுமே விளையாடியிருக்கும் சிஎஸ்கே 5 முறை கோப்பையை வென்று மிக தனித்துவ சாதனையை புரிந்துள்ளது. இது எல்லாம் தோனியின் கேப்டன்சியில் தான் கிடைத்தது.
2022ம் ஆண்டு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஜடேஜாவுக்கு வழிவிட்டார் தோனி. இருப்பினும், ஜடேஜா தலைமையிலான அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால், மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனி வசம் வந்தது. காலம் கடந்த முடிவு என்பதால், அந்த ஆண்டு சிஎஸ்கே மோசமான தோல்வியை சந்தித்தது. 42 வயதான டோனி , இந்த சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வுபெறுவார் என்று கூறப்படும் நிலையில், கேப்டன் பொறுப்பு ருத்துராஜுக்கு கொடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை பட்டம் வென்றுள்ள மும்பை அணி, 2020ம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறுகிறது. அதனால்தான் என்னவோ மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீண்டும் அழைத்து வந்துள்ளது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஆக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணி புதிய கேப்டன் அறிவிப்பை வெளியிட்ட போது கூட, “தோனி தனது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்து இருக்கிறார்” என தோனியை கௌரவ படுத்தும் விதத்தில் நடந்து கொண்டது, ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்சி மாற்றம் இப்படி மரியாதையுடன் நடக்கவில்லை என்பதால் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த மரியாதையை ரோஹித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அளிக்கவில்லை என கடும் அதிருப்தியில் ரோகித் சர்மா இருப்பதாக கூறப்படுகிறது.