இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார் ராகுல் டிராவிட். இந்திய அணியில் இப்போது அணித்தேர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. ஏனென்றால் எந்த வீரரை அணியில் இருந்து நீக்குவது என்ற மிகப்பெரிய குழப்பம் உள்ளது. அந்த அளவுக்கு திறமையான வீரர்கள் உள்ளனர். நடந்து முடிந்த நியுசிலாந்து தொடரில் கூட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டும் அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அதிலும் குறிப்பாக் டெஸ்ட் அணிக்கு நான்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் என அனைவரும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரஹானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமான சூழல் உள்ளது.
அணித்தேர்வு பற்றி பேசியுள்ள இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ‘தேர்வுக்குழுவில் எங்களுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்குள் போட்டி இருக்கிறது.இதனால் சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம். வீரர்கள் ஏன் நீக்கப்படுகிறார்கள் என்ற தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும்’ என சூசகமாக ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் நீக்கம் பற்றி கூறியுள்ளார்.