கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இருபது ஓவர், ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் ரன் குவிக்கும் இயந்திரமாக திகழ்பவர். 2014-ம் ஆண்டு தோனிக்குப் பிறகு அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், 2021-ம் ஆண்டு நவம்பர் வரையிலும் சுமார் 9 ஆண்டுகள் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை அவரே தலைமை தாங்கி வழிநடத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கோலி விலகிய விதம் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், குறிப்பாக அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கும் அவருக்கும் இருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. 2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார்.
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்து ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த நேரம் அது. 2013ம் ஆண்டு முதலே கோலி தலைமையில் விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியோ அதுவரையிலும் ஒரு கோப்பையை கூட வென்றிருக்கவில்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கோலி தலைமையில் இருதரப்பு போட்டிகள், தொடர்களை கேப்டன் கோலி வென்று தந்த போதிலும், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் அவர் தலைமையில் கோப்பை ஏதும் வரவில்லை. அதுவே அவருக்கு நெருக்கடியாக அமைந்துவிட்டது.
ஒருபுறம் முந்தைய கேப்டன் தோனி அனைத்து விதமான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்றிருக்க, மறுபுறம் அவரது சம கால வீரரான ரோகித் ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வர கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன. ராசியில்லாத கேப்டன் என்றும் முத்திரை குத்தப்பட்ட கோலி, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தனது உச்சக்கட்ட பார்மில் இருந்தும் கீழிறங்கிவிட்டார். 2 ஆண்டுகளாக அவரது பேட்டில் இருந்து சதம் வராமல் இருந்தது கண்டு ரசிகர்கள் கவலையடைந்தனர்.
அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த வசதியாக இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2021-ம் ஆண்டு நவம்பரில் விராட் கோலி அறிவித்தார். கோலி விலகியதும், அந்த பொறுப்பில் அமர வைக்கப்பட்ட ரோகித் சர்மா, அடுத்த மாதத்திலேயே ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
தற்போது இதனைப் பற்றி சவுரவ் கங்குலி டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நீக்கவில்லை. அவருக்கு டி20 இந்திய அணிக்கு தலைமை வகிக்க விருப்பமில்லை. அதே நேரம் கேப்டன் பொறுப்பை ரோகித் விரும்பவில்லை. ஆர்வமில்லாத அவரை அப்பொறுப்பை ஏற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன்.
இந்த விஷயத்தில் மட்டுமே எனக்கு பங்களிப்பு இருக்கிறது. ரோகித், சரி என்று சொல்லாவிட்டால், நானே அவரின் பெயரை அறிவிப்பேன் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு நிலைமை அப்போது சென்றது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன் என்பதாலேயே அவரை கட்டாயப்படுத்தும் நிலைக்குக் காரணம். விராட் கோலிக்கு பிறகு, இந்திய அணியை வழிநடத்த சரியான மனிதர் அவர்தான் எனத் தோன்றியது.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய செல்வக்ககை பயன்படுத்தி தற்பொழுது வரை கோலிக்கு எதிராக தொடர்ந்து கங்குலி செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, தோனி திடீரென ஓய்வை அறிவித்தது போன்று அறிவித்துவிட்டு இனி ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடலாம் என கூறப்படுகிது.