செங்கல் சூளையில் வேலை செய்தேன்… நல்ல சாப்பாடு கூட கிடையாது… கிரிக்கெட் வீரர் நடராஜன் உருக்கமான பேச்சு..

0
Follow on Google News

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது, தொடர்ந்து மூன்று யார்க்கர் பந்துகளை வீசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன். வேகப்பந்து வீச்சாளரான இவர் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மத்தியில் பேசும் பொழுது, தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி வேதனையுடன் பேசியுள்ளார்.

மயிலாடுதுறையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள விமேக்ஸ் என்ற கிரிக்கெட் பயிற்சி அகாடமியின் திறப்பு விழாவிற்கு கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடராஜன், அங்கிருந்த மாணவ மாணவிகள் மத்தியில் நீண்ட நேரம் உரையாடினார். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விஷயங்களை பேசிய நடராஜன், தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றியும் சில நிமிடங்கள் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் மேடையிலேறி பேசத் தொடங்கிய நடராஜன், “கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்” என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பேசுகையில், “விளையாட்டுத்துறை மட்டுமல்ல, நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.

20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. ” என்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார். மேலும், “நான் படிக்கும்போது நல்லா ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்.

கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனாக நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்பொழுது எனக்கு அப்பவே தெரியும் என்று கூறுகிறார்கள். இதுதான் உலகம் .. நீங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.” என்று தான் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை உதாரணமாகக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

அதே சமயம், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் நடராஜன் பேசியிருந்தார். இது குறித்து நடராஜன் உரையாற்றியதாவது: “அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன் என நடராஜன் உருக்கமாக பேசிய நடராஜன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிகிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் அகாடமியை உருவாக்கி தன்னை போல் ஏழ்மையில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியின் மூலம் தனக்கு கிடைக்கும் கோடி கணக்கான பணத்தில், தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளது குறிப்பிட்டிடத்தக்கது.