மக்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதுதான் ‘வெற்றி வீடு திட்டம்’. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 3 ஆயிரத்து 521 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால், இந்தத் திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்? ஒரு வீட்டுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும்? வீடு கட்டுவதற்கான வசதிகள் என்னென்ன? என்பதைப் பார்க்கலாம்.இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை இருக்கும். அதில் சமையலறை வசதியும், உறுதியான கான்கிரீட் கூரையும் இடம்பெறும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான மொத்த அலகுச் செலவு 5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதாவது, முதற்கட்டமாக 70 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.

இதில் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், வீடு மட்டுமல்லாமல் தனிநபர் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தித் தரப்பட உள்ளது. இதற்காக தூய்மை பாரத இயக்கம் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.அதேபோல், இந்தத் திட்டத்தில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதிலும் அரசு சில முக்கியமான விதிமுறைகளை வகுத்துள்ளது.
குறிப்பாக, குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், மண் சுவர்களைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள், உறுதியான சுவர்கள் இருந்தாலும் பலவீனமான கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதற்காக அதிகாரிகள் நேரடியாக வீடு வீடாகச் சென்று, மொபைல் செயலி மூலமாகக் கணக்கெடுப்பு நடத்துவார்கள். இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கணக்கெடுப்புப் பட்டியலும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை இணையதளத்திலும் வெளியிடப்படும்.மேலும், பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படையினரும் தகுதியானவர்களாக இருந்தால் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.
இன்னொரு முக்கியமான விஷயம், வீடு கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களைப் பயனாளிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் துறை மூலமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் போதவில்லை என்றால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை சமுதாய முதலீட்டு நிதியை 6 சதவீத வட்டியில் பெற முடியும்.
அதேபோல், கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்கான வட்டியில் ஆண்டுக்கு 3 சதவீதம் வரை, 15 ஆண்டுகளுக்கு அரசே மானியமாகச் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆக, வெறும் வீடு கட்டிக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அதற்குத் தேவையான நிதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், 5 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்த வீடு என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வெற்றி வீடு திட்டம், தகுதியான பயனாளிகளுக்கு எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டால், சொந்த வீடு இல்லாத பல குடும்பங்களின் நீண்ட நாள் கனவு நிச்சயம் நனவாகும்.




