ஆட்டுமந்தை அரசியல் செய்வதை விட்டு ஆக்க பூர்வ அரசியலை கையிலெடுங்கள்..! வெளுத்து வாங்கிய நடிகை கஸ்துரி.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக 2019 முதல் மாநிலத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், 1967-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியை இனி ‘தமிழ்நாடு நாளாக’க் கொண்டாடப்போவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார், அதே போன்று பாமக நிறுவனர் ராமதாஸ், பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல. நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழ்நாடு நாள் என்று ஜூலை 18ஆம் நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, தமிழ்நாடு என அறிவிக்கப்பட்ட தினம் ஜூலை 18. அதனால் தான் அந்த சரியான நாளை, தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்றைக்கு தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டதோ, அந்த நாளை கொண்டாடுவதே சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதே போன்று தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு நாள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு நாள் பெரும் விவாத பொருளாக தற்போது மாறியுள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், பிறப்பை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாதா? தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி தேவையா? பிறப்பிலும் பெயர் வைப்பதிலும் என்ன இருக்கிறது. பிறப்பதா பெருமை? பார் புகழ சிறப்பதே பெருமை. தாய் தமிழகத்தை நாட்டுக்கே முன் மாதிரி மாநிலமாக அமைத்து சென்ற வள்ளல்கள் தனியாக நாளும் கேட்கவில்லை, தனித்தமிழ்நாடும் கேட்கவில்லை.

அவர்களுக்கு ஒவ்வொரு தினமும் தமிழ்நாட்டு தினம்தான். இதிலெல்லாம் அரசியல் ஆதாயம் தேட தெரியாத உண்மை தலைவர்கள் அவர்கள் ! சொந்த மக்களை சூறையாடி குடிகாரர்களாக்கி ஆட்டுமந்தை அரசியல் செய்வதை விட்டு ஆக்க பூர்வ அரசியலை கையிலெடுங்கள். மக்கள் மகிழ்ந்தால் தாய் பூரிக்கப்போகிறாள். தம் மக்களை கொண்டாடுவதே தாய் தமிழ்நாட்டுக்கு பெருமை என தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கஸ்துரி.