பிரபாகரனை காமடியாக்கும் நாம் தமிழர், மே 17 உடைக்கப்பட வேண்டிய பர்னிச்சர்… வெளுத்து வாங்கிய பனிமலர்..

0
Follow on Google News

உடைக்கப்பட வேண்டிய பர்னீச்சர் எது? என்பது பற்றி பிரபல நெறியாளர் பனிமலர் பன்னீர் செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார், அதில். புலிகள், ஈழம், தலைவர் பிரபாகரன், ஈழப் போராட்டம் என்பது தமிழக மக்களின் உணர்வோடு கலந்த விசயம். பல வீடுகளில் புலிகளின் பெயர் தாங்கிய பிள்ளைகள் இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை, பெரும் பொருளை செலவு செய்தவர்கள் இங்கு இருக்கிறார்கள்.

ஈழப்போரின் இறுதியில் கையறு நிலையில் எப்படியாவது இந்த நிலை மாறாதா என்று எதிர்பார்த்தும், கொத்துக்கொத்தாய் மக்களும், தலைவர்களும் இறந்தபோது இங்கே ஆட்சியில் இருந்த திமுக மற்றும் கலைஞர் மீது கோபம் வந்ததும் மறுப்பதற்கில்லை. உண்மையில் நானும்கூட கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தி இருக்கமுடியும் என்றுதான் நம்பினேன். ஆனால் போர் முடிந்து இனி மீண்டும் போராட்டம் என்பதற்கு வாய்ப்பு இல்லை எனும்போது அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தோம்.

அதே நேரத்தில் தமிழக மற்றும் இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்போதும், இந்துத்துவா பெரும் வளர்ச்சி அடையும்போதும், இளைஞர்கள் பலரும் திராவிட அரசியல் வெறுப்பில் இருக்கும்போதும் அதற்கான வேலையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அனைத்து இயக்கங்களுமே இருந்தது. அதே நேரத்தில் திடீர் குபீர் ஈழ ஆதரவாளர்கள் உருவானார்கள், இதுவரை கைகாசை போட்டு வேலை செய்த நிலை மாறி புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடமிருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்டு தமிழகத்திலும், இந்திய அளவிலும் நாங்கள்தான் ஈழப்பிரச்சனைக்கு அத்தாரிட்டி என்பதைப் போலவும் ஒரு பொய் பிம்பத்தை கட்டியமைத்தார்கள்.

திராவிட அரசியலையும், தமிழகத் தலைவர்களையும் குறிப்பாக கலைஞரையும் மிகக் கேவலமாக சித்தரிப்பதையும், அவதூறு செய்திகளை பரப்புவதையும் மட்டுமே ஒற்றை குறிக்கோளாக கொண்டிருந்தனர்.
இங்கேயே தலைக்குமேல் வெள்ளம்போகிறது என்கிறபோதும், காலம் ஆகும்போது ஈழப் போராட்டத்தின் ரணங்கள் ஆறி எதை ஒரு மாநில அரசால், முதல்வரால் செய்திருக்க முடியும் என்ற உண்மை முகத்தில் அறையைம்போதும், நம்முடைய மாநில நலனுக்கு யார் தேவை என்ற நிலைப்பாடை எடுக்கும்போதும் நம் கண் முன்னால் திராவிட அரசியல் இருக்குறது, கலைஞர் இருக்கிறார், கலைஞரும், அம்மாவும் இல்லாமல் அதிமுக பாஜகவின் அடிமை ஆன பிறகு ஒற்றை நம்பிக்கையாக மு.க. ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார்.

அவருடைய தேர்தல் வெற்றி ஒன்றே தமிழகத்திற்கான விடிவு என்ற நிலைப்பாடை பெரியாரிய இயக்கங்கள் அனைத்தும் எடுத்தாலும், தொடர்ச்சியாக ஈழ போராட்டத்தை ஒட்டி திமுகவின்மீதும், கலைஞர் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட, புலிகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த தலைவரும் உறுதியாக ஈழப் போராட்டத்தை தமிழக அரசியலோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றோ, மாநில அரசால் என்ன செய்ய முடியும் என்றோ, அவதூறுகளையும், ஆபாசங்களையைம் ஒவ்வொரு மே மாதமும், கலைஞர் பிறந்த நாளிலும், தேர்தல் சமயங்களில் பேசும்போதும் தடுக்கத் தவறிவிட்டனர்.

சீமானும், திருமுருகன் காந்தியும் மிகப் பெரிய இளைஞர் கூட்டத்தை வன்மத்துடன் வளர்த்தெடுக்கும்போதும், பொய் புரட்டுகளை பேசும்போதும் ஆரம்பத்திலேயே உண்மைகளை சொல்லாமல் இருந்ததும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஈழப் போராட்டத்திற்கும் செய்ய தவறுதான். இன்று ஈழப் போராட்டத்தை பற்றியும், புலிகள் பற்றியும், தலைவர் பிரபாகரன் பற்றியும் இவ்வளவு மோசமாக காமெடி ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு உண்மைகளை உடைத்துப் பேசாத அத்தனை தலைவர்களும் பொறுப்பு.

அதை விடுத்து அரக்கர்கள்மேல் குற்றம்சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்புடையதில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும், நாம் தமிழரும், மே 17 ம் தொடர்ந்து அவதூறுகளையும், ஆபாசப் பேச்சுகளையும் உதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். எவனோ ஒருவன் நம் வீட்டில் அம்மா, அப்பாவை தொடர்ந்து கெட்ட வார்த்தை பேசினால், பொருத்து போவான், விலகிப்போவான், கடைசியில் தாங்க முடியாமல் அவன் சொன்ன கெட்டவார்த்தையை திரும்பச் சொல்லுவான். அதுதான் சமீபகாலமாக நடக்குறது.

நான் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்களிடமிருந்து முரண்படுகிறேன், தலைவரை கொச்சைப்படுத்துபவர்களிடமிருந்து முரண்படுகிறேன். ஆனால் விணை என்னவென்று பார்க்காமல் எதிர்விணையை மட்டும் பார்ப்பதையும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன். 90 சதவீதம் ஒத்த கருத்துடைய, புலிகள் என்ற நிலையில் மட்டும் மாற்றுக்கருத்து உள்ள தோழர்களை உளவு அமைப்பின் கூட்டாளி என சொல்வதை பேரதிர்ச்சியுடன் பார்க்கிறேன்.

தமிழகத்தில் உடைக்கப்பட வேண்டிய பர்னீச்சர் நாம் தமிழர், மே 17, போன்ற அமைப்புகள் 2009 க்கு பிறகு அரைகுறை ஈழ அரசியலை கையிலெடுத்த அனைவரையும். குறிப்பாக இலங்கையில் வாடும் ஈழ மக்கள்மேல் எந்த அக்கறையும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழக அரசியலில் கருத்துசொல்லிக்கொண்டும், கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும், எங்கள் தலைவர்களை கொச்சைப் படுத்திக்கொண்டும், இங்கிருக்கும் அரசியலை மாற்ற முடியும் என நம்பி பணத்தை வாரி இறைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும்தான். அரக்கர்களை அல்ல. என பனிமலர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.