தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார், அதில் சில முக்கிய அரசாணைகள் தமிழக தாய்மார்கள், மகளிர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்து அவர்கள் மனதில் பதவி ஏற்ற முதல் நாளே இடம் பிடித்துவிட்டார் என்ற அளவுக்கு தமிழக மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதில், தினமும் அதிகாலை அன்றாட அத்தியாவசிய பொருளாக விளங்கி வரும் ஆவின் பால் விலையை குறைத்துள்ளார், தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
மேலும், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.